Published : 31 Aug 2020 10:16 AM
Last Updated : 31 Aug 2020 10:16 AM

கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாத 1072 குடிசைமாற்று வாரிய வீடுகள்

ஈரோடு

ஈரோட்டில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும், 1072 குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கான, அரசாணை இதுவரை வெளியிடப்படாததால் பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை.

ஈரோடு வீட்டு வசதி வாரிய பிரிவின், குடிசை மாற்று அபிவிருத்தி திட்டம் ‘மறு குடியமர்வு’ திட்டத்தின் கீழ், ஈரோடு, கருங்கல்பாளையம் அழகரசன் நகரில் ஒன்பது மாடியுடன், கார் பார்க்கிங், லிப்ட் வசதியுடன் 272 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், ஈரோடு புதுமை காலனியில் 460 வீடுகளும், பெரியார் நகரில் 336 வீடுகளுமாக மொத்தம் 1072 வீடுகள் ரூ.111 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளுக்கான பணிகள் அனைத்தும் ஓராண்டுக்கு முன்பே முடிந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனால், இதுவரை பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படாத நிலை தொடர்கிறது.

இது தொடர்பாக ஈரோடு வீட்டு வசதி வாரிய குடிசைமாற்றுத் திட்ட அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் த.துரைராஜ் கூறியதாவது:

நாங்கள் குடியிருந்து வந்த குடிசைமாற்று வாரிய வீடுகள் பழுதடைந்த நிலையில், புதிய கட்டிடம் கட்டித் தருவதாகக் கூறி வீடுகளைக் காலி செய்யச் சொன்னார்கள். புதிய வீடுகள் கட்டப்பட்டதும், அவை எங்களுக்கு ஒதுக்கித் தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. தற்போது வீடுகள் திறப்புவிழா கண்டபின்பும் எங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை.

நாங்கள் நிரந்தர வருவாய் இல்லாமல் கூலி வேலையை நம்பியுள்ளவர்கள். தற்போது அதிக வாடகை கொடுத்து பெரும் சிரமத்திற்கிடையே வாழ்ந்து வருகிறோம். புதிய வீடுகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமானால் ரூ.ஒரு லட்சம் வரை கட்ட வேண்டுமென அதிகாரிகள் கூறுகின்றனர். அவ்வளவு பெரிய தொகையை எங்களால் கட்ட முடியாத நிலையில் உள்ளோம். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் சமூக விரோதிகள் புகுந்து, பொருட்களைத் திருடி வருகின்றனர், என்றார்.

இது தொடர்பாக ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்து 1072 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்திருந்தாலும், இதுவரை அரசாணை வெளியிடப் படவில்லை. மேலும், திட்ட விதி முறை களின்படி, வீடுகளைப் பெறு பவர்கள் தலா ஒரு லட்சம் வரை தங்கள் பங்களிப்பாக செலுத்த வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயனாளிகள் ஏழைகள் என்பதால், இந்த தொகையை குறைக்க வேண்டுமென, துறை அமைச்சரான துணை முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். மாவட்ட அமைச்சர் செங்கோட்டையன் மூலமும், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் போது, முதல்வர் மற்றும் துணைமுதல்வரைச் சந்தித்துப் பேசி, குடிசைமாற்று வாரிய வீடுகளை விரைவாக பயனாளிகளுக்குப் பெற்றுத் தருவேன், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x