Last Updated : 30 Aug, 2020 11:10 AM

 

Published : 30 Aug 2020 11:10 AM
Last Updated : 30 Aug 2020 11:10 AM

திருப்பனந்தாள் பகுதி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு சென்றாலும் வறண்டு காணப்படும் குளங்கள்: நீர்வரத்துப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

தண்ணீரின்றி வறண்டு காணப்படும் பந்தநல்லூர் கோயில் திருக்குளம்.

கும்பகோணம்

ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு சென்றாலும், நீர்வரத்துப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கள் காரணமாக, திருப்பனந்தாள் பகுதிகளில் உள்ள குளங்கள் தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந் தாள் ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், ஒவ்வொரு கிராமத்திலும் 2 அல்லது 3 குளங்கள் உள்ளன. இந்தக் குளங்கள் பெரும்பாலும் பாசனத்துக்கான கட்டமைப்பாகவே வெட்டப்பட்டுள்ளன. குறிப்பாக பந்தநல்லூர் ஊராட்சியில் மட்டும் நல்லாங்கண்ணி குளம், பொன்னாட்சி குளம், ஆண்டிகுளம், பெரியகுளம், மோட்டார்குளம், திருக்குளம் ஆகியவை உள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள வேலூர் கோட்டை அகழி, தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை அகழிக்கு அடுத்தபடியாக, பந்தநல்லூரில் பசுபதீஸ்வரர் கோயில் அகழி உள்ளது.

பந்தநல்லூர் பகுதியில் உள்ள இந்த நீர்நிலைகள் அனைத்தும், மண்ணியாறு, காவிரியின் பாசன வாய்க்கால்கள் மூலம் சங்கிலித் தொடர் போல ஒவ்வொன்றாக நிரம்புவது வழக்கம். ஆனால், தற்போது பல இடங்களில் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக அடைபட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு சென்றபோதும், குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை.

காவிரி ஆற்றில் கடந்த ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப் பட்டும், இந்தப் பகுதிகளில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பரவலான மழை பெய்தும், இதுவரை குளங்களில் தண்ணீர் நிரம்பாததால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் க.பாலகுரு கூறியதாவது: திருப்பனந்தாள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களுக்கு காவிரி மற்றும் அதன் துணை ஆறுகள் மூலம்தான் நீர்வரத்து உள்ளது. ஆற்றில் தண்ணீர் வரும்போது இயல்பாகவே வரத்து வாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் வந்து விடும். ஆனால், தற்போது சிலரால் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பல குளங் களுக்கு தண்ணீர் வராமல் வறண்டு காணப்படுகின்றன.எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை பாரபட்ச மின்றி அகற்றுவதுடன், 100 நாள் வேலை திட்டத்தில் நீர்வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்து, குளங்களுக்கு தண்ணீரைக் கொண்டுவர வேண்டும். இந்தக் குளங்கள் நிரம்பினால்தான், நிலத்தடி நீராதாரத்தைக் கொண்டு, 4 ஆயிரம் ஏக்கரில் பாசனம் செய்ய முடியும் என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை பொறியாளர் ஒருவர் கூறிய தாவது: திருப்பனந்தாள் பகுதியில் உள்ள குளங்களுக்கு சி, டி பிரிவு வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் செல்வது வழக்கம். இவற்றின் பராமரிப்புகள் அனைத்தும், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் வசம் உள்ளன. வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகளை உள்ளாட்சி அமைப்பினர் அகற்றினாலே, குளங்களுக்கு தடையின்றி தண்ணீர் வந்துவிடும். தற்போது, ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் ஏ, பி பிரிவு வாய்க்கால்களில் தண் ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சி, டி பிரிவு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு களை அகற்றி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்ல உள் ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x