Published : 29 Aug 2020 06:59 PM
Last Updated : 29 Aug 2020 06:59 PM
கருவூல இணையதளத்தில் தொடரும் சர்வர் பிரச்சினையால் ஊதிய பட்டியலை அனுப்ப முடியாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதியப் பட்டியல் மற்றும் பணப்பலன் பட்டியலை காகிதப் பயன்பாடின்றி ஆன்லைன் மூலம் கருவூலத்திற்கு அனுப்புவதற்காக ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாடு நிதி மேலாண்மைத் திட்டம் (ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ்) செயல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் தொடரும் சர்வர் பிரச்சினையால் ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் இணையதள இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. அப்படியே இணைப்பு கிடைத்தாலும் சிறிது நேரத்திலேயே துண்டிக்கப்படுவதால், அதில் தயாரிக்கப்பட்ட ஊதியப் பட்டியல் அனைத்தும் அழிந்து விடுகின்றன.
இதனால் ஊதியப் பட்டியலை மீண்டும், மீண்டும் தயாரிக்க வேண்டியுள்ளது.
இப்பிரச்சினையால் இம்மாத ஊதிய பட்டியலை பல அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் அனுப்ப முடியாமல் திணறி வருகின்றன.
மேலும் சில பிரச்சினைகளால் அரசு உதவி பெறும் பள்ளிகள் பழைய முறையிலேயே ஊதியப் பட்டியலை தயாரித்து ஊதியம் பெறலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் உதவி பெறும் பள்ளிகள் கண்டிப்பாக ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் இணையம் மூலமே ஊதியப் பட்டியலை அனுப்ப வேண்டுமென கருவூலத்துற உத்தரவிட்டது.
இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளும் ஊதிய பட்டியலை அனுப்ப முடியாமல் திணறி வருகின்றன. பட்டியல் அனுப்பாததால் ஆகஸ்ட் மாத ஊதியம் குறித்த காலத்தில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘புதிய திட்டம் என்பதால் சில குறைபாடுகள் இருக்கின்றன. சர்வர் பிரச்சினையை சரி செய்ய உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்,’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT