Last Updated : 29 Aug, 2020 06:40 PM

 

Published : 29 Aug 2020 06:40 PM
Last Updated : 29 Aug 2020 06:40 PM

சிவகங்கை மாவட்ட மக்களிடம் வரவேற்பை பெற்ற கரோனாவிற்கான சித்தா சிகிச்சை மையம்

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தொடங்கப்பட்ட கரோனாவிற்கான சித்தா சிகிச்சை மையம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி அரசு மருத்துவமனை, அமராவதி புதூர் கரோனா மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கரோனாவிற்காக திருப்பத்தூரில் சித்தா சிகிச்சை சிறப்பு மையம் தொடங்கப்பட்டது. மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் பிரபாகரன் தலைமையில் மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இம்மையத்தில் மூன்று வேளை உணவுடன் அதிகாலையில் மஞ்சள், உப்பு கலந்த வெந்நீரை வாய் கொப்பளிக்க கொடுக்கின்றனர். தொடர்ந்து நொச்சி குடிநீர் குடிக்க கொடுக்கின்றனர். மஞ்சள், நொச்சி கலந்த வெந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.

மாலை 4 மணிக்கு சித்தர் யோகம், திருமூலம் பிரணயாமம் தியான பயிற்சி அளிக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சுண்டல், பாசிப்பயிறு, கடலை பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இரவில் சுக்கு, மிளகு, மஞ்சள் கலந்த பால் வழங்கப்படுகிறது. தொடர்ந்து இஞ்சி சாறு கொடுக்கின்றனர். ஐந்து நாட்களில் குணமடைந்ததும் ஆரோக்யம் மருந்து பெட்டகம் வழங்குகின்றனர்.

தொடக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் இம்மையத்திற்கு செல்ல தயக்கம் காட்டினர். தற்போது தாமாக முன்வந்து அம்மையத்திற்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

சித்தா மருத்துவர்கள் கூறுகையில், ‘இதுவரை 17 பேர் சிகிச்சை வந்துள்ளனர். அவர்களில் 8 குணடைந்துள்ளனர். மற்றவர்கள் விரைவில் குணமடைந்துவிடுவர்,’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x