Last Updated : 28 Aug, 2020 09:17 PM

3  

Published : 28 Aug 2020 09:17 PM
Last Updated : 28 Aug 2020 09:17 PM

மளிகைக் கடை டூ மக்களவை உறுப்பினர்; தமிழகத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி: எம்.பி. வசந்தகுமார் மறைவால் கன்னியாகுமரி மக்கள் சோகம்

நாகர்கோவில்

கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் கரோனா தொற்று ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரும், அவரது மனைவியும் கரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி குணமடைந்தார்.

இந்நிலையில் நுரையீரல் தொற்று அதிகரிப்பால் நேற்று அபாய கட்டத்தில் சென்ற வசந்தகுமார் எம்.பி. இன்று மாலை மரணமடைந்தார்.

வசந்தகுமார் எம்.பி. கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனை பெற்றவர். இவர் 6,27,235 வாக்குகள் பெறறிருந்தார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் 2,67,302 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் 2,59,933 வாக்குகள் பெற்று குமரி மக்களவை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பெற்றிருந்தார்.

அதற்கு முன்பு நாங்குனேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வந்தார். வசந்தகுமார். கன்னியாகுமரி தொகுதியில் நகர, கிராமப் பகுதிகளில் பாகுபாடு பார்க்காமல் அரசு நிதியுதவி இன்றி சொந்த செலவிலே மக்களுக்கு உதவி செய்து பாராட்டு பெற்றவர் வசந்தகுமார். இந்நிலையில் அவரே கரோனா பாதிப்பில் இறந்திருப்பது மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேல்ஸ்மேன், கிளை மேலாளர், கடை முதலாளி..

70 வயதான வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஹரிகிருஷ்ணன் நாடார், தாய் தங்கம்மை. மனைவி தமிழ்செல்வி. இவருக்கு விஜய் வசந்த், வினோத்குமார், தங்கமலர் ஆகிய 3 மகன், மகள்கள் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அன்தனர் இவரது சகோதரர் ஆவார். அவரது மகள் தமிழிசை தவுந்தரராஜன் ஆகியோரின் அரிசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற பெறுமை வசந்தகுமாருக்கு உண்டு வசந்தகுமார்.

துவக்கததில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராகப் பணியில் சேர்ந்தர். அப்போது அவருக்கு வெறும் 70 ரூபாய் தான் ஊதியம். ரேடியோ, ஃபேன் என மாதத் தவணையில் பொருட்களை விற்பனை செய்த அந்த நிறுவனத்தில் தவணை வசூல் செய்யும் வேலை தான் அவருடையது. அதுவும் பல கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து அதை வசூல் செய்வாராம். அவருடைய உழைப்பு அவருக்கு கிளை மேலாளர் பதவியைப் பெற்றுத் தந்தது. ஆனால் அந்த வேலை நிமித்தமாக வெளி மாநிலத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால் வேலையைத் துறந்தார்.

பின்னர் மிகச் சிறிய முதலீட்டைக் கொண்டு மளிகைக் கடையை தொடங்கிய அவர் படிப்படியாக முன்னேறி வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை நிறுவினார்.

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளாவிலும் வசந்த் அன்கோவை நிருவினார். 70க்கும் மேற்பட்ட கிளைகளை நிறுவி சிறந்த வர்த்தகராக பெயரெடுத்தார்.

சகோதரர் வழியில் காங்கிரஸ்..

தொழிலில் தன்னை அடையாளப்படுத்திய வசந்தகுமார், தனது சகோதரர் குமரி அனந்தனை பின்பற்றி காங்கிரஸின் முக்கிய தலைவராக திகழ்ந்து வந்தார்.

நாங்குநேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் கடந்த 2019-ம் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சோனியா, ராகுல் என்று காங்கிரஸ் மேலிடத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவராக வசந்தகுமார் திகழ்ந்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை அரசின் நிதியுதவி இல்லாமலும் சொந்த செலவில் செய்து வந்தார்.

கரோனா பாதிப்பின்போதும் கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில், மார்த்தாண்டம் என்று பல நகர, கிராமப் பகுதிகளுக்கும் சென்று உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

இதனால் அவர் கடந்த மாதம் சென்னையில் தங்கி கட்சிப்பணி, மற்றும் வர்த்தகத்தை கவனித்து வந்தார். அப்போது அவர் கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிந்த காங்கிரஸ் கட்சியினர், மற்றும் மக்கள் அவர் குணம் பெறவேண்டி மும்மத பிரராத்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வசந்தகுமார் மறைவை முன்னிட்டு அவரது சொந்த கிராமமான அகஸ்தீஸ்வரம் மட்டுமினறி கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x