Last Updated : 28 Aug, 2020 07:54 PM

 

Published : 28 Aug 2020 07:54 PM
Last Updated : 28 Aug 2020 07:54 PM

தொடரும் மணல் கடத்தல்: நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்- நீதிபதிகள் எச்சரிக்கை

மதுரை

மணல் கடத்தல் வழக்குகள் தொடரும் நிலையில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வரம்பிற்குட்பட்ட மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாவட்டங்களில் சவுடு மண், உபரி மண் எடுக்க என அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சவுடு மண் எடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் உபரி மண் எடுக்க, மண் எடுக்க எனும் பெயரில் உரிமங்கள் வழங்கப்பட்டு மணல் எடுக்கப்படுகிறது. அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்படும் பதில்மனுக்களில் உள்ள திட்டங்கள், அரசாணைகள் அனைத்தும் பெயரளவில் மட்டுமே உள்ளன.

ஏராளமான நீதிமன்ற உத்தரவுகளும், அரசாணைகளும் உள்ள் நிலையில், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.
மேலும் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் இந்நிலை தொடர்ந்தால் தமிழக தலைமைச் செயலரை காணொளி மூலமாக விசாரிக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இது தொடர்பான அறிக்கையை திங்கட்கிழமை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் ஏற்கனவே தமிழக அரசின் அரசாணையின்படி மணல் குவாரிகள் அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் தனியாருக்கு வழங்கப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு உபரி மண் எடுக்க, சவுடு மண் எடுக்க என உரிமம் வழங்கி சட்டவிரோத மணல் கடத்தலை ஊக்குவிக்கிறது.

விவசாய பயன்பாட்டிற்காக எடுக்கப்படும் மண், மணல் உள்ளிட்டவை உண்மையிலேயே அதற்காகத்தான் பயன்படுத்தப்படுக இதற்காக அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் தங்களையே பிரச்சனையில் சிக்க வைத்துக் கொள்கிறார்கள்.

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில் எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இவை தொடர்பாக அதிகாரிகளுக்கு முறையான விழிப்புணர்வு உள்ளதா? என்றனர்.

பின்னர், தமிழக அரசுத்தரப்பில் விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x