Published : 28 Aug 2020 07:31 PM
Last Updated : 28 Aug 2020 07:31 PM
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 14 லாரிகளை வருவாய்துறையினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
அபிராமம் அருகே வல்லக்குளம் கிராமத்தில் கிருதுமால் நதியை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் மண் அள்ளும் ராட்சத இயந்திரம் மூலம் அரசு அனுமதியின்றி ஏராளமான டிப்பர் லாரிகளில் மணல் கடத்தபடுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து கமுதி வட்டாட்சியர் செண்பகலதா, அபிராமம் காவல் ஆய்வாளர் ஜான்ஸிராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பரமக்குடி கோட்டாட்சியர் தங்கவேலு, ராமநாதபுரம் கனிமவளத்துறை வட்டாட்சியர் வரதராஜன், உதவி புவியியலாளர் ரஹிமா சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, மணல் எடுக்க முறையான ஆவணங்கள் இல்லாத, மணல் கடத்தலில் ஈடுபட்ட 14 டிப்பர் லாரிகள், ஒரு டிராக்டர், ராட்சத மண் அள்ளும் இயந்திரங்கள், பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகளை கண்டதும் லாரிகளிலிருந்த ஓட்டுனர்கள் தப்பியோடியதால், 4 லாரிகள் மட்டும் அபிராமம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 30- க்கும் மேற்பட்ட வருவாய்துறையினர், போலீஸார் சென்று மீதியுள்ள 10 லாரிகள் உள்ளிட்ட இயந்திரங்களை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். மணல் கடத்தலில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டது குறித்து அபிராமம் வருவாய் ஆய்வாளர் அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் லாரி உரிமையாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT