Published : 28 Aug 2020 06:55 PM
Last Updated : 28 Aug 2020 06:55 PM
பரமக்குடி அருகே தேசிய வங்கியில் நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் 293 சவரன் நகைகளை திருடிய நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் ஏரளமான வாடிக்கையாளர்கள் நகைக்கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சூரைச் சேர்ந்த கண்ணன், பாலசுந்தரி ஆகியோர், பெற்ற நகைக்கடனை திருப்பிச் செலுத்தி, நகைகளை வங்கியில் கேட்டுள்ளனர். ஆனால் நகைகளை தராமல் வங்கி அலுவலர்கள் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் வங்கி மேலாளரிடம் புகார் செய்தனர். அதன்பின் ராமநாதபுரம் மண்டல மேலாளர், கிளை மேலாளர் உள்ளிட்டோர் வங்கிக்கடன் கொடுக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
இதில் நகைக் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் நகை கொடுக்கும்போது, நகை மதிப்பீட்டாளர் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மணிநகரைச் சேர்ந்த ஆர்.மணிகண்டன் நகைகளின் எடையை குறைத்துக் காண்பித்து, ஒவ்வொரு வாடிக்கையாளிடமும் ஒரு சில நகைககளை மோசடியாக திருடிச் சென்றது தெரிய வந்தது.
இத்தகவல் வெளியானதையடுத்து கடந்த 26-ம் தேதி நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வங்கிக்கிளையை முற்றுகையிட்டனர்.
அதனையடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மோசடி செய்த நகை அல்லது அதற்கான பணத்தை திருப்பிச் செலுத்துவதாக வாடிக்கையாளர்களிடம் உறுதி அளித்தனர்.
இந்நிலையில் நகை மோசடி நடந்தது தொடர்பாக இவ்வங்கியின் தூத்துக்குடி மண்டல உதவி பொது மேலாளர் எம்.காந்தி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்து, வங்கியின் நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன் மற்றும் சில அலுவலர்கள், நகைக்கடன் பெற்ற 153 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ. 43.95 லட்சம் மதிப்புள்ள 293 சவரன் நகைகளை மோசடி செய்து திருடிச் சென்றதாக வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT