Published : 28 Aug 2020 05:48 PM
Last Updated : 28 Aug 2020 05:48 PM

தாய்மொழியில் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு பயனற்றது ஆசிரியர் கூட்டணி கருத்து

கோவில்பட்டி

தாய்மொழியில் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லாததால் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது பயனற்றது என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் கூட்டம் காணொளி மூலம் நடந்தது. கூட்டத்தில், தேசிய கல்விக்கொள்கை - 2020 தொடர்பான விவாதம் நடந்தது. மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்.

விவாதத்தை பொதுச்செயலாளர் ச.மயில் தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் க.ஜோதி பாபு, துணை பொதுச்செயலாளர் தா.கணேசன், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆசிரியர்கள் தேசிய கல்விக்கொள்கை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில், தேசிய கல்விக்கொள்கை - 2020 குறித்து பாராளுமன்றத்தில் எந்தவித விவாதத்துக்கும் உட்படுத்தாமல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் செயலாளர் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களிடம் ஆக.31-ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக கருத்து கேட்கப்பட்டுள்ளது.

கல்வி மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. ஆனால், மாநில அரசுகளின் கருத்துக்களை எதிர்பார்க்காமல் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக மத்திய அரசு கருத்து கேட்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். இதுகுறித்து தமிழக அரசு தனது நிலையை தெரிவிக்க வேண்டும்.

ஆசிரியர்களிடம் கருத்து கோரி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் 11 கருப்பொருள்கள் கொண்டதாகவும், அதன் கீழ் 102 வினாக்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

இவை அனைத்தும், ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உள்ளது. ஆசிரியராக இருந்தாலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது தெளிவாக புரிந்து கொண்டு, தாய்மொழியில் கருத்துக்களை தெரிவிப்பது போன்று பிற மொழிகளில் தெரிவிக்க முடியாது. இதனால் இந்தியா முழுவதும் ஆசிரியர்களிடம் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் கருத்து கேட்பது எந்தவித பயனையும் தராது.

கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்த கருத்துக்களை புறந்தள்ளி வரைவு அறிக்கையை அப்படியே மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்கள் தொடர்பாக கருத்துகள் கூறுவதற்கு வாய்ப்பளிக்காமல், அதில் உள்ள பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது வேடிக்கையானது.

மேலும், கருத்து கேட்பு படிவத்தில் ஆசிரியர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விபரங்களையும் கேட்பது ஆசிரியர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதை தடுக்கும் செயலாகும். எனவே, இந்த கருத்து கேட்பு ஒரு பயனையும் தராது என்பதே உண்மை.

எனவே, ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக பல்வேறு கூறுகளை கொண்ட தேசிய கல்விக்கொள்கை - 2020ஐ மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் தெரிவித்த ஆக்கப்பூர்வமான கருத்துகளை உள்ளடக்கிய தேசிய கல்விக்கொள்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து விரிவாக விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x