Published : 28 Aug 2020 05:48 PM
Last Updated : 28 Aug 2020 05:48 PM
கோவை மாநகரில் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதைக் கண்டறிந்த காவல்துறை துணை ஆணையர், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கோவை மாநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் நேரங்களிலும், ஊரடங்கு நாட்களிலும், தடையை மீறித் திறந்து டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக மாநகரக் காவல்துறைக்குப் புகார்கள் வந்தன. தொடர் புகார்களைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர்கள், கண்காணிப்புப் பணியை முறையாக மேற்கொள்கின்றனரா என்பதைக் கண்டறிய மாநகர சட்டம் ஒழுங்குத் துணை ஆணையர் ஸ்டாலின் முடிவு செய்தார்.
அதன்படி, துணை ஆணையர் ஸ்டாலின் மற்றும் சில காவலர்கள் சாதாரண உடையில், தனியார் வாகனத்தில் இரு தினங்களுக்கு முன்னர் மாநகரை வலம் வந்தனர். காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையின் பாருக்கு அன்று இரவு 11 மணிக்குச் சென்று 'மதுபாட்டில்கள் விற்பனைக்கு உள்ளதா?, என்ன விலை?' எனக் கேட்டனர். அங்கிருந்த ஊழியர்களும் வந்திருப்பது காவல்துறையினர் எனத் தெரியாமல், வழக்கம்போல் மதுவகைகள், அதன் விலை விவரங்களைக் கூறியுள்ளனர்.
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்கப்படுவதை உறுதி செய்த துணை ஆணையர் ஸ்டாலின், அங்கிருந்தபடியே வாக்கி டாக்கி மைக் மூலம், அந்தக்கடை உள்ள பகுதியைச் சேர்ந்த காவல் ஆய்வாளரை அழைத்து மதுவிற்பனை குறித்துக் கேட்டுள்ளார். துணை ஆணையர் அங்கு இருப்பது தெரியாமல், அந்த ஆய்வாளர் 'அங்கு கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதில்லை, நான் கண்காணித்து விட்டேன்' என பதில் தெரிவித்துள்ளார்.
பின்னர், ''நான் அந்தக் கடையில்தான் இருக்கிறேன், நேரடியாகச் சோதனை செய்து கள்ளச்சந்தையில் மது விற்பனை நடப்பதை உறுதி செய்துள்ளேன். கண்காணிப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ள மாட்டீர்களா?'' என வாக்கி டாக்கி மைக் மூலம் துணை ஆணையர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதை மாநகரக் காவல்துறையினர் அனைவரும் கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர், அந்தப் பகுதியின் உதவி ஆணையர், காவலர்கள் அனைவரும் இரவு நேரத்திலேயே அடித்துப் பிடித்து, அவசரம் அவசரமாக அங்கு வந்துள்ளனர்.
அவர்களைக் கடுமையாக எச்சரித்த துணை ஆணையர் ஸ்டாலின், ‘கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுக்க ஒழுங்காகக் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்,’ என மாநகரக் காவல்துறையினரை எச்சரித்துள்ளார். துணை ஆணையர் திடீர் ஆய்வு நடத்துவதால், இரவுப் பணியில் இருக்கும் காவலர்கள் கள்ளச்சந்தை மதுவிற்பனையைத் தடுக்க கண்காணிப்புப் பணியை விழிப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாகத் துணை ஆணையர் ஸ்டாலின் கூறும்போது, ''புகார் வந்தது, சோதனை நடத்தி உறுதி செய்தேன். சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட அனைவரும் கண்காணிப்புப் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT