Published : 28 Aug 2020 05:22 PM
Last Updated : 28 Aug 2020 05:22 PM
புதுச்சேரியில் கரோனா தொற்றும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உச்சமாக இன்று ஒரே நாளில் 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்து எண்ணிக்கை 199-ஐத் தொட்டது.
புதுச்சேரியில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 13,024 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,080 பேர் (62.04 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக, இன்று புதுவையில் 278 பேர், காரைக்காலில் 41 பேர் என மொத்தம் 319 பேர் வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 2,216 பேர், காரைக்காலில் 162 பேர், ஏனாமில் 86 பேர் என 2,464 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுவையில் 2,078 பேர், காரைக்காலில் 71 பேர், ஏனாமில் 119 பேர், மாஹேவில் 13 பேர் என மொத்தம் 2,281 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், "புதுச்சேரியில் நேற்று 1,689 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவையில் 475 பேர், காரைக்காலில் 46 பேர், ஏனாமில் 83 பேர் என மொத்தம் 604 பேருக்குத் (35.76 சதவீதம்) தொற்று இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 8 பேர், காரைக்காலில் ஒருவர் என 9 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.53 சதவீதமாக உள்ளது. புதுவை மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,745 பேர் சிகிச்சையில் உள்ளனர்" என்றார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், "மத்தியக் குழுவில் ஜிப்மர் மருத்துவர்கள் உள்ளனர். புதிதாக வந்த ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் மூவருடன் இணைந்து ஆய்வு செய்து பரிந்துரைகளைத் தந்துள்ளனர். அவர்கள் தந்த பரிந்துரைகள் ஏற்கெனவே அறிந்ததுதான். அதைச் செயல்படுத்தும் பணியில் உள்ளோம். அது நடைமுறையில் வந்தால் 20 நாட்களில் பாதிப்பு அளவு குறையத்தொடங்கும். தற்போது தொற்று பாதிப்பானது எதிர்பார்த்த அளவைத் தாண்டியுள்ளது.
மருத்துவமனைகளில் பணியாற்றத் தற்காலிகச் செவிலியர்களை நியமிக்க நேர்முகத் தேர்வு நடந்துள்ளது. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்களில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் என 458 பேரை நியமிப்பது தொடர்பான அனுமதிக்கான கோப்பை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். உடன் ஒப்புதல் கிடைத்தால் உடன் பணி தர முடிவு எடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT