Published : 28 Aug 2020 05:04 PM
Last Updated : 28 Aug 2020 05:04 PM
கரோனா ஊரடங்கால் மூடப்பட்ட நூலகங்களை திறக்கக்கோரிய மனு, செப். 1 முதல் நூலகங்கள் திறக்கப்படும் என அரசு அறிவித்ததையடுத்து முடித்து வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திரு முருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 32 மாவட்ட நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1915 கிராம நூலகங்கள், 745 பகுதிநேர நூலகங்கள் செயல்படுகின்றன. கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து நூலகங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனால் தகுதி தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை எழுதும் மாணவர்கள் தங்களை தயார் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சி கூடங்கள், வங்கிகளும் திறக்கப்பட்டுள்ளன.
கரோனா ஊரடங்கு விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் நேரத்தை முறையாக பயன்படுத்த நூலகங்களை திறக்க உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், செப்.1 முதல் நூலகங்களை திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது என்றார். இதை பதிவு செய்து கொண்டு மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT