Published : 28 Aug 2020 04:09 PM
Last Updated : 28 Aug 2020 04:09 PM

மகாபலிபுரத்தை இந்தியத் தொல்பொருள் ஆய்வின் குறு வட்டமாக அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் கோரிக்கை

கங்கைகொண்ட சோழபுரம்

இந்தியத் தொல்பொருள் ஆய்வின் புதிய வட்டமாக திருச்சியை அண்மையில் அறிவித்தது மத்தியக் கலாச்சார அமைச்சகம். இதையடுத்து, கர்நாடகத்தின் ஹம்பியை முன்னர் அறிவிக்கப்பட்டதுபோல, தமிழகத்தின் மகாபலிபுரத்தை இந்தியத் தொல்பொருள் ஆய்வின் குறு வட்டமாக (மினி சர்க்கிள்) அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொல்லியல் ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்.

தமிழகத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 403 புராதனச் சின்னங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் கண்காணித்து நிர்வகிக்கும் பொறுப்பு சென்னையில் உள்ள இந்தியத் தொல்பொருள் ஆய்வு வட்டத்தின் வசம் இருந்தது. இந்த நிலையில், திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தொல்பொருள் ஆய்வு வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கு இப்போது விடிவுகாலம் பிறந்திருக்கிறது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியத் தொல்பொருள் ஆய்வு வட்டத்தை இரண்டாகப் பிரித்து திருச்சியில் புதிதாக ஒரு ஆய்வு வட்டம் அமையவிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியத் தொல்பொருள் ஆய்வு வட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதால் தமிழகம் அடையப் போகும் பலன்கள் குறித்து நம்மிடம் பேசினார் தொல்லியல் ஆய்வாளரான தஞ்சையைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.சிவராமகிருஷ்ணன்.

“சுமார் 700 தொல்லியல் புராதனச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் கர்நாடக மாநிலத்தில் ஹம்பி, பெங்களூரு, தார்வாடு என மூன்று தொல்பொருள் ஆய்வு வட்டங்கள் இருக்கின்றன. இந்த வட்டங்களுக்காக ஆண்டுக்கு 25 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆனால், ஒரே ஒரு தொல்பொருள் ஆய்வு வட்டத்தைக் கொண்ட நமக்குச் சமீபகாலம் வரை 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இப்போதுதான் அது 8 கோடி ரூபாய் ஆகியிருக்கிறது. இந்த நிதியிலிருந்துதான் கேரளத்தில் உள்ள 16 தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கவும் நிதி ஒதுக்க வேண்டும். இப்போது தமிழகத்தில் இன்னொரு வட்டம் உருவாகி இருப்பதால் தமிழகத்தின் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவும் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் 20 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படும்.

எஸ்.சிவராமகிருஷ்ணன்

தமிழகத்தில் 403 புராதனத் தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக புராதனச் சின்னங்கள் 5 மட்டுமே இருக்கின்றன. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயம், கங்கைகொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர் ஆலயம், மகாபலிபுரம் ஆகிய கட்டுமானக் கோயில்களுடன் ஊட்டி மலை ரயிலும் இந்தப் பட்டியலில் வருகிறது. ஆனால், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாகக் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயிலையும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலையும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையும் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற உலக புராதனச் சின்னங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்களின் நீண்ட நாளைய கோரிக்கை.

இதற்காக அந்தந்தப் பகுதிகளில் கையெழுத்து இயக்கங்கள்கூட நடத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும் இந்தக் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை. புதிய வட்டம் பிறந்திருப்பதால் இனிமேலாவது அது நடக்கும் என்று நம்புவோம்.

மேலும், சென்னை வட்டத்தில் வரும் புதுச்சேரியிலும் உலக புராதனச் சின்னங்களாக அங்கீகரிக்க வேண்டிய இடங்கள் இருக்கின்றன. புதுச்சேரியில் பிரெஞ்சு ஆளுநராக இருந்தவர் டூப்ளக்ஸ். இவருக்கு உதவியாளராக (துபாஷி) இருந்தவர் ஆனந்தரங்கப்பிள்ளை. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் எழுதி வைத்த குறிப்புகள்தான் பிரெஞ்சு வரலாற்றைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கான ஆவணமாக இருக்கின்றன. புதுச்சேரியில் ஆனந்தரங்கப்பிள்ளை வாழ்ந்த வீட்டை உலக பாரம்பரியச் சின்னமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அங்குள்ள திருபுவனை பெருமாள் கோயில், பாகூர் கோயில் இதெல்லாமே பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்.

புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு, சங்க காலத்தில் புகழ்பெற்ற வர்த்தக நகரமாக விளங்கியது. சுமார் 600 ஆண்டுகள் பெரிய அளவில் வாணிபம் நடந்த துறைமுகப்பட்டினம் இது. கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள், கிழக்காசிய நாட்டினர் எனப் பலரும் வந்து வர்த்தகம் செய்த இடம் இது. இதை யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பாரம்பரியச் சின்னமாக மாற்ற வேண்டிய அவசியமும் அவரசமும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. வெறுமனே பாரம்பரியச் சின்னம் என்ற அறிவிப்பைக் கடந்து இங்கெல்லாம் மெய்நிகர் அருங்காட்சியகங்களையும் ஊடாடும் அருங்காட்சியகங்களையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலை நாடுகள் ஐந்தாம் தலைமுறைக்கு ஏற்ற வகையில் தங்கள் நாட்டு அருங்காட்சியகங்களை நவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் பெருமளவில் சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டுக்கு ஈர்த்து அந்நியச் செலவாணிகளைப் பெருக்கும் முயற்சியில் அவை இருக்கின்றன. ஆனால், 2000 ஆண்டுகள் தொன்மையான வரலாற்றுச் சின்னங்கள் நம் நாட்டில் இருந்தாலும் அவற்றை நாம் கண்டும் காணாமலே இருக்கிறோம். இனியாவது இந்த நிலை மாறவேண்டும்.

சோழ மண்டலத்தின் புராதனங்களைப் பேசும் வகையில் திருச்சி உறையூர் அல்லது தஞ்சையிலும், பாண்டிய மண்டலத்தின் புராதனங்களைப் பேசும் வகையில் மதுரையிலும் சேரமண்டலத்தின் புராதனங்களைப் பேசும் வகையில் கரூர் அல்லது கோவையிலும் மெய்நிகர் மற்றும் ஊடாடும் அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும். இதையெல்லாம் செய்து முடித்தால் 150 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைத் தமிழகத்தை நோக்கி ஈர்க்க முடியும்” என்கிறார் சிவராமகிருஷ்ணன்.

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தொல்பொருள் ஆய்வு வட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தது ‘கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்’. இப்போது புதிய வட்டம் அறிவிக்கப்பட்டதில் இந்தக் குழுமத்தின் முன்னெடுப்பும் முக்கியமானது.

கோமகன்

புதிய தொல்பொருள் ஆய்வு வட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அந்தக் குழுமத்தின் தலைவரும் தொல்லியல் ஆர்வலருமான பொறியாளர் கோமகனிடம் கேட்டபோது, “எங்களின் 10 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது. 40 எம்.பி.க்கள் சேர்ந்து சாதிக்க வேண்டிய விஷயத்தை நாங்கள் தனி இயக்கமாகச் சாதித்திருக்கிறோம். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருப்பது போல் நமது மாநிலத்திலும் இந்தியத் தொல்பொருள் ஆய்வுக்கு இரண்டாவது சர்க்கிள் தேவை என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பல சுற்றுகள் பேசினோம்; மனு கொடுத்தோம். கலாச்சாரத் துறை இணை அமைச்சரையும் சந்தித்துப் பேசினோம். இத்தனைக்கும் பிறகுதான் இது சாத்தியமாகி இருக்கிறது. தொல்பொருள் ஆய்வுக்குப் புதிய வட்டம் உருவாகி இருப்பதன் மூலம் தமிழகத்தில் புதிதாகப் புராதனச் சின்னங்கள் அடையாளப்படுத்தப்படும்; ஏற்கெனவே உள்ளவை மேம்படுத்தப்படும்.

தொல்லியல் சட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்த முடியும். இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு இன்னொரு கோரிக்கை ஒன்றையும் நாங்கள் முன்வைக்கிறோம். 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கர்நாடகத்தின் ஹம்பி நகரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரிய சின்னங்கள் (மொத்தச் சின்னங்கள் 52) பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆண்டுதோறும் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து செல்கிறார்கள். இதுவரை இந்தியத் தொல்பொருள் ஆய்வின் குறு வட்டமாக இருந்த ஹம்பி இப்போது இன்னொரு தனி வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னைக்கு அருகிலிருக்கும் மகாபலிபுரத்தையும் இந்திய தொல்பொருள் ஆய்வின் குறு வட்டமாக அறிவித்து அதை மேம்படுத்தச் சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்” என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x