Last Updated : 28 Aug, 2020 02:44 PM

 

Published : 28 Aug 2020 02:44 PM
Last Updated : 28 Aug 2020 02:44 PM

புதுச்சேரியில் 32 பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கா?- ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக எம்எல்ஏ தர்ணா; முதல்வரிடம் மனு

ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ.

புதுச்சேரி

புதுச்சேரியில் 32 பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியின் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தர்ணாவில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வரிடம் மனு தந்து, முழு ஊரடங்கை அமல்படுத்த வலியுறுத்தினர்.

புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வந்தார். காரில் வந்த அவரைப் போலீஸார் தடுத்தனர். காரிலிருந்து இறங்கி நுழைவாயிலில் தரையில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டம் தொடர்பாக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் கூறுகையில், "கரோனா தொற்று ஆரம்பக் காலத்தில் கட்டுப்பாட்டு மண்டலமாக எனது தொகுதி அறிவிக்கப்பட்து. இதனால் தொகுதி மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். அரசு அறிவித்தபடி காய்கறி, மளிகைகூட வழங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் உள்ளூர் ஊரடங்கு 32 பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும்.

எனவே உள்ளூர் ஊரடங்கை அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு நிவாரணத்தை வழங்கி, பின் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தித் தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்சியர் அருண் அலுவலகத்துக்கு வந்தார். தனது அறைக்குச் சென்ற ஆட்சியர், உதவியாளர் மூலம் எம்எல்ஏவை அழைத்து வரச் சொன்னார். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன், ஆட்சியர் அருணைச் சந்தித்துப் பேசினார். மேலும் உள்ளூர் ஊரடங்கை வாபஸ் பெறக்கோரி மனு அளித்தார்.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர் ஆகியோரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களும் ஆட்சியர் அருணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக எம்எல்ஏக்கள், உள்ளூர் ஊரடங்கை ரத்து செய்யவேண்டும். கட்டாயம் அமல்படுத்த நினைத்தால் உரிய நிவாரணத்தை முதலில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி தந்தார்.

அதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் மூவரும் முதல்வர் நாராயணசாமியைச் சந்தித்து மனு தந்தனர். அதில், "புதுச்சேரியில் 32 பகுதிகளுக்கு ஒரு வார முழு ஊரடங்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று. மாவட்ட ஆட்சியரின் பொருத்தமில்லா ஊரடங்கு உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். தொடர்ந்து புதுச்சேரி முழுக்க 7 தினங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக மக்களுக்குக் கால அவகாசமும், போதிய நிதியுதவியும் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு மனு தந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x