Published : 28 Aug 2020 02:36 PM
Last Updated : 28 Aug 2020 02:36 PM
கரோனா அச்சத்தால் ஓணம் சீஸனில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மலர்களை கேரளாவிற்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் தோவாளை மலர் சந்தை, கேரள வியாபாரிகள் வராமல் களையிழந்து காணப்படுகிறது. அத்தப்பூ கோலத்திற்கான வண்ண பூக்களை சாகுபடி செய்த விவசாயிகள் செடிகளிலே மலர்கள் அழிந்து பேரிழப்பை சந்தித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தின் மலர் தேவையின் பாதிக்கும் மேற்பட்டவற்றை நிவர்த்தி செய்து வருகிறது. திருவிழாக்கள், திருமணம், பண்டிகை நாட்கள், மற்றும் மங்கள நிகழ்ச்சிகளுக்கு தோவாளை மலர் சந்தையில் இருந்தே கேரளாவிற்கு பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் திருவனந்தபுரம் முதல் கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கேரள வியாபாரிகள் தோவாளை மலர் சந்தைக்கு வருகை தந்து பூக்களை மொத்தமாக கொள்முதல் செய்து வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்வர்.
கேரளாவின் முதன்மை பண்டிகையான ஓணம் வருகிற 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், அலுவலகங்கள், கோயில்களில் அத்தப்பூ கோலமிடும் வைபவம் நடந்து வருகிறது.
அத்தப்பூவிற்கு கிரேந்தி, வாடாமல்லி, கோழிகொண்டை போன்ற வண்ண மலர்களே தேவைப்படும். வழக்கமான ஓணம் சீஸனில் தோவாளை மலர் வியாபாரிகள் மட்டுமின்றி, தோவாளை, மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மலர் சாகுபடி விவசாயிகளும் நல்ல வருவாய் ஈட்டுவர்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா ஊரடங்கிற்கு மத்தியில் கேரள அத்தப்பூ கோலத்திற்கான மலர்களை விற்று ஓரளவு லாபம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் தோவாளை பூ வியாபாரிகள் விற்பனையை தொடங்கினர்.
இந்நிலையில் பூக்கள் மூலம் கரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து பூக்களை கொள்முதல் செய்வதை தவிர்க்குமாறும், கேரளாவிலே கிடைக்கும் பூக்களை கொண்டே அத்தப்பூ கோலத்தை அலங்கரித்து ஓணத்தை கொண்டாடுமாறும் கேரள அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனால் தோவாளை மட்டுமின்றி பிற பகுதிகளுக்கும் ஓணத்திற்கான பூக்கள் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
கேரள வியாபாரிகள் மலர் சந்தைகளுக்கு வரவில்லை. இதனால் அத்தப்பூ கோலமிட தொடங்கிய முதல் நாளில் அதிக பூக்களை விற்பனைக்காக வைத்து ஏமாந்து போன விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். ஓணம் சீஸனின்போது 10 நாட்களுக்கு மேலாக தினமும் மதியம் 2 மணிக்கு மேல் தோவாளை மலர் சந்தையில்
வழக்கமாக பூக்கள் விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள மலையாள மொழிபேசும் மக்கள் மட்டுமே அத்தப்பூவிற்கான மலர்களை வாங்கி செல்கின்றனர். இதனால் காலை 10 மணிக்கு முன்பாகவே தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை முடிவிற்கு வந்து விடுகிறது.
ஓணம் சீஸனுக்காக தோவாளை, செண்பகராமன்புதூர், ஆரல்வாமொழி, ராஜாவூர், பண்டாரபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் கிரேந்தி, வாடாமல்லி உட்பட அத்தப்பூ கோலத்திற்கான வண்ணப்பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பருவத்தில் பூத்து குலுங்கின. தற்போது கேரளாவில் இருந்து மலர்களை யாரும் வாங்க வராததால் மலர் தோட்டங்களில் பறிக்கப்படாத பூக்கள் செடியிலே அழிந்து வருகின்றன. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி மலர் தோட்ட விவசாயிகளும் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.
தினமும் சந்தைக்கு வரும் 25 டன்னிற்கு மேலான உள்ளூர், வெளியூர் பூக்கள் தோட்டங்களிலே தேக்கமடைந்துள்ளன.
இதுகுறித்து தோவாளை மலர்சந்தை மொத்த வியாபாரி ராஜேந்திரன் கூறுகையில்; 25 ஆண்டுகளுக்கு மேலாக தோவாளையில் மலர் வியாபாரம் செய்து வருகிறேன். எனது அனுபவத்தில் ஓணம் சீஸனில் இதுபோன்ற பேரிழப்பை சந்தித்ததில்லை. கேரள அரசு தரப்பில் வெளிமாநிலங்களில் மலர்களை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளதால் பூ வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. அவ்வாறு ஒருசில வியாபாரிகள் குறைந்த அளவு பூக்களை வாங்க முன்வந்தாலும், அவர்களது வாகனத்தை களியக்காவிளை சோதனை சாவடியிலேயே கேரள போலீஸார் தடுத்து நிறுத்தி குமரி மாவட்டத்திற்குள் அனுமதிப்பதில்லை.
போக்குவரத்திற்கும் இ பாஸ் போன்ற கடினமான நடைமுறை இருப்பதால் கேரளாவில் இருந்து யாரும் வரவில்லை. இதனால் தோவாளை மலர் சந்தை வியாபாரிகளுக்கு பலகோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெளிமாநில மலர்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறி, முட்டை, நேந்திரன் காய், மற்றும் உணவு தானியங்களை மட்டும் கேரளாவில் அனுமதிப்பது ஒருதலை பட்சமாக உள்ளது. ஓணத்திற்கு முந்தைய தினமாவது கேரளாவிற்கு பூக்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.
விற்பனை சரிவை எதிரொலிக்கும் வாடாமல்லி!
கோலத்திற்கு கிரேந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, கொழுந்து உட்பட வண்ண மலர்களே அதிகமாக விற்பனையாகும். இதில் வாடாமல்லியை பொறுத்தவரை தமிழகத்திலேயே அதிக அளவில் தோவாளையில் தான் பயிரிடப்படுகிறது. பிற பூக்களில் இருந்து பராமரிப்பும் குறைவு என்பதால் ஓணம் சீஸனில் வாடாமல்லி விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டுவர். ஆனால் இந்த ஆண்டு வாடாமல்லி விற்பனை 90 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. வழக்கமாக ஓணம் களைகட்ட தொடங்கியதுமே கிலோ 300 ரூபாய்க்கு குறையாமல் வாடாமல்லி விற்பனையாகும். தற்போது தேவை குறைவால் 30 ரூபாய்க்கு மட்டுமே விற்கிறது. வாடாமல்லியின் விலை வீழ்ச்சியே ஓணம் சீஸனின் விற்பனை சரிவை பிரதிபலிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT