Published : 28 Aug 2020 07:31 AM
Last Updated : 28 Aug 2020 07:31 AM
முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்களில் 2 பேரும், புகார் அளித்த முன்னாள் எம்எல்ஏ ஒருவரும் பேரவைத் தலைவர் பி.தனபாலிடம் விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், செம்மலை, கே.பாண்டியராஜன், ஆர்.நடராஜ், மாணிக்கம், சரவணன், சண்முகநாதன், ஆறுகுட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், மனோகரன் ஆகிய 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனியாக செயல்பட்டனர். முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், 2017 பிப்ரவரி18-ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
6 எம்எல்ஏக்கள் புகார்
இதையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யுமாறு பேரவைத் தலைவரிடம் 6 எம்எல்ஏக்கள் புகார் அளித்தனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரவைத் தலைவரே சட்டப்படி முடிவெடுப்பார் என்று தெரிவித்திருந்தது. அதன்பிறகும் தீர்ப்பை செயல்படுத்தவில்லை என்று திமுக தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 11 எம்எல்ஏக்கள் மற்றும் புகார் அளித்த 6 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, அவர்களிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மற்றவர்களிடமும் விசாரணை
அதன்படி, பேரவைத் தலைவர் நேற்று முதல் விசாரணை நடத்தி வருகிறார். புகார் அளித்தவர்களில் ஒருவரான முன்னாள் எம்எல்ஏ பார்த்திபன் மற்றும் 11 எம்எல்ஏக்களில் அமைச்சர் கே.பாண்டியராஜன், மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜ் ஆகியோர் விசாரணையில் பங்கேற்று விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களிடமும் விசாரணை நடத்தி, விளக்கம் பெறப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT