Published : 28 Aug 2020 07:23 AM
Last Updated : 28 Aug 2020 07:23 AM
சென்னை காவல்துறையில் பணிபுரிந்து இறந்த தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்துக்கு அவர்களுடன் பணியில் சேர்ந்த காவலர்கள் வாட்ஸ்-அப் குழு அமைத்து ரூ.26 லட்சத்து 40 ஆயிரம் நிதி திரட்டினர். அதை சம்பந்தப்பட்ட காவலர்களின் குடும்பத்தினருக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.
சென்னை, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்தவர் தலைமைக் காவலர் ஆர்.தேசிங்கு. இவர் கடந்த ஜூலை 3-ம் தேதி எதிர்பாராதவிதமாக இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இதேபோல், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் ராபர்ட்டும் அதே மாதம் 9-ம் தேதி இறந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். காவலர்கள் இறந்ததால் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் பணிக்குச் சேர்ந்த (1999-ம் ஆண்டு பேட்ச்) காவலர்கள் தமிழகம் முழுவதும் வாட்ஸ்-அப் குழு மூலம் ஒன்றிணைந்து நிதி திரட்டினர். அதன்படி, சுமார் 2,500 பேர் இணைந்து இறந்துபோன 2 நண்பர்களின் குடும்பத்துக்கு ரூ.26 லட்சத்து 25 ஆயிரம் நிதி திரட்டினர். இதையறிந்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாதிக்கப்பட்ட இரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வீதம் ரூ.15 ஆயிரம் வழங்கினார்.
இந்நிலையில், இறந்து போனதலைமைக் காவலர்கள் தேசிங்குமற்றும் ராபர்ட் ஆகியோரின் குடும்பத்தினரை நேற்று வரவழைத்து, இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்த வசூலான தொகை ரூ.26 லட்சத்து 40 ஆயிரத்தை பிரித்து வழங்கினார்.
இப்பணத்தை இறந்த தலைமைக் காவலர்களின் பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் எதிர்கால தேவைக்கு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) ஏ.அமல்ராஜ், இணை ஆணையர் எஸ்.மல்லிகா, துணை ஆணையர்கள் ஆர்.திருநாவுக்கரசு, பெரோஸ்கான் அப்துல்லா, எஸ்.விமலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT