Published : 28 Aug 2020 06:46 AM
Last Updated : 28 Aug 2020 06:46 AM

வாக்குச்சாவடி வாரியாக 13 பேர் பணிக் குழு: 20 நாட்களில் நியமிக்க திமுக தலைமை உத்தரவு

கோப்புப் படம்

மதுரை

வாக்குச்சாவடி வாரியாக 13 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை 20 நாட்களுக்குள் நியமிக்க திமுக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் 2021 ஜனவரியில் வெளியாக உள்ளது. இத்தேர்தலை சந்திக்க பல அரசியல் கட்சிகள் தற்போதே பணிகளைத் தொடங்கிவிட்டன. திமுக சார்பில் வாக்குச்சாவடி வாரியாகப் பொறுப்பாளர் ஒருவர் ஏற்கெனவே நியமிக்கப்பட் டுள்ளார். தற்போது மேலும் 13 பேர் பணிக் குழுவை அமைக்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து திமுக மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

திமுகவில் கிளை வாரியாக செயலாளர், நிர்வாகிகள் தேர்தல் முடிந்து கட்சித் தலைமைக்குப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் விவரம் மாவட்டம் வாரியாக கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிபார்க்க ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பட்டியலில் இடம்பெற்றுள்ள போலி வாக்காளர்களை நீக்கவும், வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் இருக்கவும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் வாக்குச்சாவடி அலுவலருடன் இணைந்து பணியாற்றுவார். ஆளுங்கட்சி சார்பில் மொத்தமாக பெயர் விவரங்கள் வழங்கப்பட்டு பட்டியலில் சேர்க்கும் முயற்சியை தடுக்கக் கண்காணிப்புடன் செயல்பட அறிவுரை வழங்கப்பட் டுள்ளது.

தற்போது வாக்குச்சாவடி வாரியாக 13 பேர் கொண்ட பணிக் குழுவை நியமிக்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. 3 பேர் பொறுப்பாளர்களாகவும், இவர்களுக்கு கீழ் 10 பேர் குழுவாகவும் செயல்படுவர். திமுகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத்தரும் முக்கிய பணியில் இவர்கள் ஈடுபடுவர். 20 நாட்களுக்குள் இந்த பணிக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து, பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.

இந்த பணிக் குழுவினர் அனைவரின் மொபைல் போன் எண்கள் கட்சித் தலைமை அலுவலகக் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். அவர்கள் எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் எனக் கட்சி தலைமையால் பணிக் குழுவுக்கு நேரடியாகவே தொடர்ந்து அறிவுரைகள் அனுப்பப்படும். பணிக் குழுவை நியமிக்கும் பணியில் ஒன்றிய, நகர், மாவட்டச் செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x