Published : 27 Aug 2020 08:55 PM
Last Updated : 27 Aug 2020 08:55 PM
நாம் கேட்பது, ஓராண்டுக்கான தற்காலிக விலக்கு அல்ல, உயிர்க்கொல்லி 'நீட்'டிடம் இருந்து, கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் வாழும் அடித்தட்டு மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு! அந்தப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் கடமையில் இருந்து அதிமுக அரசு, அரசியல் காரணங்களுக்காக, நழுவிப் போக நினைத்தால் திமுக சும்மா விடாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
“இந்த ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்குத் தாருங்கள் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சம்பிரதாய முறையில் எழுதியிருக்கும் வழக்கமான கடிதமும், அதற்கு முரண்பாடாக, கரோனா முடிந்த பிறகு நீட் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் பழனிசாமி கடலூரில் இன்று சொல்லி இருப்பதும், தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக அரசு செய்துள்ள பச்சைத் துரோகங்கள்.
நீட் தேர்வில் இருந்து நிரந்த விலக்கு தேவை என்பதுதான் தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை. ஏழை - எளிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்குக் கோரி, சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு; அதற்கு மாறாக, முதல்வரே பேசுவது தமிழ்நாடு இதுவரை கண்டிராத விசித்திரம்.
அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு தனது அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்துக்கு எதிராகவே பேசும் முதல்வர் என்ற 'புதிய சாதனையை' பழனிசாமி படைத்திருக்கிறார். சந்தர்ப்பவாத பூனைக்குட்டி இப்போதாவது வெளியே வந்திருந்திருக்கிறதே என்று தமிழ்நாட்டு மக்கள் விழித்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு!
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குக் கோரிய தமிழக சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு குப்பைக்கூடையில் எறிந்துவிட்டது; அதிமுக அரசு, அந்தச் சட்ட முன்வடிவுகளைக் கமுக்கமாகக் கைவிட்டுவிட்டது!
நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிமுக அரசு எடுத்துள்ளதை, தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். செல்வங்கள் அனிதா, சுபஶ்ரீ தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் இரக்கமற்ற செயல் இது.
தமிழகச் சட்டப் பேரவையைக் கூட்டி, "தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த மாட்டோம்; பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்துவோம்" என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
நாம் கேட்பது, ஓராண்டுக்கான தற்காலிக விலக்கு அல்ல, உயிர்க்கொல்லி 'நீட்'டிடம் இருந்து, கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் வாழும் அடித்தட்டு மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு! அந்தப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் கடமையில் இருந்து அதிமுக அரசு, அரசியல் காரணங்களுக்காக, நழுவிப் போக நினைத்தாலும், மாணவர் நலனிலும் சமூக நீதியிலும் தளராத நம்பிக்கை கொண்டுள்ள திமுக அதை அனுமதிக்கவே அனுமதிக்காது”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT