Published : 27 Aug 2020 08:30 PM
Last Updated : 27 Aug 2020 08:30 PM

உயர்அழுத்த மின் கம்பி அமைக்க எதிர்ப்பு: கோவில்பட்டி பெரியசாமிபுரத்தில் போராட்டம்- 16 பேர் கைது

கோவில்பட்டி 

வேம்பார் அருகே பெரியசாமிபுரம் கிராமம் வழியாக உயர் மின் அழுத்த மின் கம்பி வழித்தடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேம்பார் அருகே பெரியசாமிபுரம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் படகு கட்டும் தொழிற்சாலைக்கு, பெரியசாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு முன்பு உள்ள மின்மாற்றியில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் எடுக்க மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

கிராமத்தின் மையப்பகுதியான சர்ச் தெரு வழியாக மும்முனை மின்சாரத்துக்காக வயர் கொண்டு செல்லப்படுவதற்கு பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடந்த 12-ம் தேதி மும்முனை மின்சாரத்துக்கான மின்கம்பிகள் இணைக்கும் பணிக்கான மின்வாரிய ஊழியர்கள் வந்தனர்.

அப்போது இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில், வயர் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வுக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் மூலம் ஆய்வு நடத்தி, மும்முனை மின் இணைப்பு கொடுக்கலாம் என அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிது.

இதையடுத்து இன்று காலை மும்முனை மின்சாரத்துக்கான மின் கம்பிகள் பொருத்தும் பணி மேற்கொள்ள ஊழியர்கள் அங்கு வந்தனர். இதையொட்டி டி.எஸ்.பி.க்கள் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், கலை கதிரவன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பத்மநாபன் பிள்ளை, கலா, முருகன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் மும்முனை மின் இணைப்பு ஊருக்குள் வழியாக செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ரூபன் தலைமையில் 5 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து பிரச்சினைக்கு உரிய தெருவில் மும்முனை மின்சாரம் இணைப்பு கம்பிகள் கம்பங்கள் வழியாக பொருத்தப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x