Published : 27 Aug 2020 08:25 PM
Last Updated : 27 Aug 2020 08:25 PM
புதுச்சேரியில் கரோனா படுவேகமாக அதிகரித்துள்ள 32 பகுதிகளில் மட்டும் வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமலாகிறது.
புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரிப்பால் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தொற்று 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. படுக்கை வசதிகள் இல்லாததால் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் வெளியே சுற்றும் போக்கு உள்ளது. தற்போது படுக்கை வசதிகளை அதிகரிக்கும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு புதுச்சேரியில் அமலில் உள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவும் பகுதிகளுக்கு ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் புதுச்சேரி ஆட்சியரும், சுகாதாரத்துறைச் செயலருமான டாக்டர் அருண் பிறப்பித்த உத்தரவு:
''புதுச்சேரியில் கரோனா தொற்று இரண்டு மடங்காக அதிகரிக்கும் பகுதிகள், பரவுதல் விகிதம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. அதில் கரோனா தொற்று படுவேகமாகப் பரவும் 32 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்.
இங்கு வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இங்குள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், தனியார் அலுவலங்கள் மூடப்பட்டிருக்கும். இப்பகுதி மக்களின் வசதிக்காக அங்குள்ள காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 முதல் 12 மணி வரை திறந்திருக்கும். மருத்துவத் தேவையைத் தவிர வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது. முழு ஊரடங்கு பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள் மற்றும் பால் பூத் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு உண்டு.
இப்பகுதியைச் சாராதோர் ஊரடங்கு பகுதிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இப்பகுதிகளில் மருத்துவக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இப்பகுதி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். விதிகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு டாக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு பகுதிகள்
புதுச்சேரி சண்முகாபுரம், தட்டாஞ்சாவடி, குண்டுபாளையம், திலாசுபேட், தென்றல் நகர், ஐய்யப்பன் நகர், சக்தி நகர், அனிதா நகர், ஓ.கே.பாளையம் அய்யனார் கோயில் தெரு, தியாகமுதலியார் நகர், முல்லை நகர், பெரியார் நகர், கங்கையம்மன் கோயில் தெரு, குறிஞ்சி நகர், மடுவுபேட், பெத்துசெட்டிபேட், தில்லைநகர் முதல் வசந்தம் நகர் வரை, கணுவாபேட் சாலை ஜங்ஷனிலுள்ள புதுநகர், ஆர்.கே. நகர், பிச்சவீராம்பேட் 1,2,3,4 வாய்க்கால் தெரு, ஜெ.ஜெ. நகர், ரெயின்போ நகர், குமரகுருபள்ளம், கோவிந்தசாலை, செந்தாமரை நகர், சோலை நகர், வைத்திக்குப்பம், முத்தியால்பேட்டில் முத்தைய முதலியார் தெரு, செயின் ரொசாரியோ தெரு, காட்டாமணிக்குப்பம் தெரு, உளவாய்க்கால், தருமபுரி தெரு மற்றும் பெருமாள் கோவில் தெரு, பொறையூர்பேட் -புதுநகர், பங்கார்பேட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT