Last Updated : 27 Aug, 2020 07:57 PM

 

Published : 27 Aug 2020 07:57 PM
Last Updated : 27 Aug 2020 07:57 PM

காவல் நிலைய சித்திரவதையால் சிறுவன் மரணம்: தடயவியல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை

நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கப்பட்டு பின்னர் இறந்தது தொடர்பான வழக்கில் தடயவியல் அறிக்கையை 2 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கோச்சடையைச் சேர்ந்த எம்.ஜெயா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் 17 வயது மகன் முத்துகார்த்திக். பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலிருந்தான். அவரை எஸ்.எஸ்.காலனி போலீஸார் நகை திருட்டு வழக்கில் விசாரிப்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 13-ல் அழைத்துச் சென்றனர். 4 நாள் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியுள்ளனர்.

ஜனவரி 16-ல் முத்து கார்த்திக் எனக்கு போன் செய்து தன்னுடைய அனைத்து சான்றிதழ்களுடன் காவல் நிலையம் வருமாறு அழைத்தான். காவல் நிலையம் சென்று பார்த்த போது, உடல் முழுவதும் வலிப்பதாகவும், போலீஸ் வேனில் ஏற்றி வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று நகை திருடியதை ஒத்துக்கொள்ளுமாறு கூறி போலீஸார் தாக்கியதாக கூறினான்.

காவல் நிலைய சித்திரவதை தொடர்பாக ஜனவரி 18-ல் நீதித்துறை நடுவரிடம் புகார் அளித்தேன். இரு நாட்களுக்கு பிறகு சிறுவர் நீதிகுழுமம் அதிகாரிகள் என்னை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர்.

கடுமையான காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் மகன் ஜனவரி 24-ல் இறந்தான். என் மகன் இறப்புக்கு போலீஸாரே காரணம். எனவே விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, முத்து கார்த்திக் மரணம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், விசாரணை முடிந்து விட்டது. தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றார்.

மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், சிபிசிஐடி தரப்பில் 6 மாதமாக இந்த பதில் தான் சொல்லப்படுகிறது என்றார்.
இதையடுத்து 2 மாதத்தில் தடயவியல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x