Last Updated : 22 May, 2014 10:00 AM

 

Published : 22 May 2014 10:00 AM
Last Updated : 22 May 2014 10:00 AM

உயர் நீதிமன்றத்தில் தொடங்கப்படுமா சிறார் நீதிக் குழு?

தேசிய அளவிலான நீதிபதிகள் மாநாட்டில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தப்பட்டும்கூட சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறார் நீதிக்குழு இன்னும் தொடங்கப்படவில்லை. அதை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் தமிழகத்தில் சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கவும் சிறார் நீதிச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர்களுக்கான பல்வேறு உரிமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. எனினும் தமிழகத்தில் இச்சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், உழைப்புச் சுரண்டல் உள்பட பல்வேறு சட்ட விரோதங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கல்வி வசதி வழங்குவதாகக் கூறி வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஏழை சிறுவர்களை தமிழகத்துக்குக் கடத்திவரும் சம்பவங்களும் நடக்கின்றன.

விதிமீறல் இல்லங்கள்

‘நாட்டிலேயே அதிக சிறுவர் இல்லங்கள் உள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இங்கு 2 ஆயிரம் சிறுவர் இல்லங்கள் உள்ளன’ என்று கூறப்படுகிறது. அதில் பல இல்லங்கள் முறையாக பதிவு செய்யப்படாமல், விதிமுறைகளுக்கு மாறாக செயல்படுபவை.

குற்றச் செயல்களில் சிறுவர்களுக்குத் தொடர்பு இருந்தால்கூட, அவர்களது உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறார் நீதிச் சட்டம் கூறுகிறது. ஆனால் இதுதொடர்பாக இங்குள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு போதிய பயிற்சிகள் கிடையாது. விசாரணைக்காக சென்னை நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், போலீஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான சம்பவம் உதாரணம்.

2009-ல் தீர்மானம்

‘சிறார் நீதிச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, உறுதி செய்ய ஒவ்வொரு மாநில உயர் நீதிமன்றங்களிலும் சிறார் நீதிக் குழுக்கள் தொடங்கப்பட வேண்டும்’ என்று 2009-ம் ஆண்டு டெல்லியில் நடந்த நீதிபதிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும்கூட சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறார் நீதிக் குழு இதுவரை தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து சிறார் நலனுக்காக பாடுபடும் சமூக ஆர்வலரும், ‘மாற்றம் இந்தியா’ மையத்தின் இயக்குநருமான அ.நாராயணன் கூறியதாவது:

சிறார் நீதிச் சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். சிறுவர்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சிறுவர் இல்லங்களை முறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் சிறுவர் இல்லங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதல்கட்டமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்படும் சிறுவர் இல்லங்களை ஆய்வு செய்த அந்தந்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஆய்வு அறிக்கையை கடந்த டிசம்பரில் உயர் நீதிமன்றத்தில் அளித்தது. அந்த அறிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறார் நீதிக் குழு இருந்திருந்தால், இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் உடனே சிறார் நீதிக் குழு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் சமீபத்தில் மனு அளித்துள்ளேன்.

இவ்வாறு நாராயணன் கூறினார்.

அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் உடனே சிறார் நீதிக் குழு தொடங்கப்பட்டால், தமிழகத்தில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்குமான நடவடிக்கைகள் தீவிரமாகும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x