Last Updated : 27 Aug, 2020 09:47 AM

 

Published : 27 Aug 2020 09:47 AM
Last Updated : 27 Aug 2020 09:47 AM

சென்னை தொல்லியல் வட்டம் இரண்டாகப் பிரிப்பு: திருச்சியை மையமாகக் கொண்டு தொல்லியல் வட்டம் - ‘தென் மாவட்டங்களில் புதிய ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்பு’

திருச்சி

நாட்டிலுள்ள பாரம்பரியம் மற்றும் புராதனச் சின்னங்கள் இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறையால் (ஏ.எஸ்.ஐ) பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் 29 தொல்லியங்கள் வட்டங்கள் (சர்க்கிள்) அமைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் 403 தொல்லியல் சின்னங்கள் உள்ள நிலையில், இவை அனைத்தும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரே வட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்தன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொல்லியல் சின்னங்களில் முழுமையான களப்பணி மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட முடியாத சூழ்நிலை நிலவியது.

எனவே, சென்னை தொல்லியல் வட்டத்தை இரண்டாகப் பிரித்து திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஒரு தொல்லியல் வட்டத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பி சு.திருநாவுக்கரசரும் இதுதொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், திருச்சி உட்பட நாடு முழுவதும் 7 புதிய தொல்லியல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் நீண்டகால கோரிக்கை நிறைவேறி உள்ளதால், தமிழ்நாட்டிலுள்ள தொல்லியல் ஆர்வலர்கள், தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து எம்.பி சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியை மையமாகக் கொண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தனி வட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்று, திருச்சி சர்க்கிள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக இத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் தென் மாவட்டங்களில் உள்ள புராதன கோயில்கள் மற்றும் இத்துறையின் வாயிலாக பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து இடங்களும் பாதுகாக்கப்படவும், புனரமைக்கப்படவும், புதிய ஆய்வுகள் மேற்கொள்ளவும், கூடுதலாக நிதி பெறவும், புதிய பணிகள் தொடங்கவும், விரைந்து நடைபெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

புராதன சின்னங்கள் கவனம் பெறும்

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியது:

சென்னை தொல்லியல் வட்டத்துக்கான அதிகாரிகளால் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது திருச்சியை மையமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை கவனிப்பாரற்றுக் கிடந்த ஏராளமான புராதனச் சின்னங்களை ஆய்வு செய்து, அவற்றை தொல்லியல் சின்னங்களின் பட்டியலில் இணைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x