Published : 27 Aug 2020 08:05 AM
Last Updated : 27 Aug 2020 08:05 AM
ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்களை அமைதியாக வேடிக்கை பார்த்த அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, குற்ற வழக்கும் தொடர வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் வழக்குகளுக்கு இது முன்மாதிரியான தீர்ப்பு என்று துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வேதாந்தா குழும நிறுவனமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, நிபந்தனைகளை முறையாக பின்பற்றவில்லை என்று கூறி, 2018-ல் அதன் அனுமதியை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை. இதற்கிடையே ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டம், கலவரமாக மாறியதால், ஆலையை அரசு நிரந்தரமாக மூடியது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 18-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. ‘‘ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு சரியானது’’ என்று தீர்ப்பில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு குறிப்பிட்டிருந்தது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் அத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
ஸ்டெர்லைட் ஆலையின் கசடு விற்கப்பட்டு தனியார் பட்டா நிலத்தில் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டது. சாலையில் செல்வோர் கண்ணில் படும் வகையில் சிறு குன்றுபோல குவித்து வைக்கப்பட்டிருந்த அந்த கசடு கரைந்து, ஆறு அடைபட்டு பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கவனிக்காதவர்களாக இருந்து, நடவடிக்கை எடுக்க தவறியுள்ளனர்.
சுற்றுச்சூழல் தணிக்கை குறித்து ‘நீரி’ அமைப்பு 2015-ல் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆலையை சுற்றியுள்ள கிணற்றுநீர் குடிக்க உகந்ததாக இல்லை. அதில் ஆர்சனிக், காட்மியம், குரோமியம், காரீயம், தாமிரம் போன்ற உலோகங்கள் அதிகம் உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. இதிலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடமை தவறியுள்ளது.
காற்று மாசு அளவு எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. ஆனால் கடந்த 2015, 2016-ல் ஆலை பகுதியில் எடுக்கப்பட்ட தரவுகளில், மாசு அளவு ஒரேமாதிரி இருந்தது. கருவிகளை சரியான இடத்திலும் வைக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்தது என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. காற்றின் தரம் முறையாக கண்காணிக்கப்படாதது மிகப்பெரிய பிரச்சினை.
மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபந்த னைக்கு உட்பட்டு, அனுமதி பெற்றே ஆலையை இயக்க வேண்டும். அனுமதியை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் நிலுவையில் இருக்கிறது என்பதை காரணம் காட்டி, அபாயகர கழிவுகளை தொடர்ந்து கையாள முடியாது. ஆனால் எத்தகைய கண்காணிப்பும் இன்றி, கடந்த 2013 முதல் அனுமதியின்றி அத்தகைய கழிவுகளை கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர். இதில் இருந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உறுதியாக தெரிகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், உயர் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் வசித்த 80,725 பேரிடம் உடல்நலன், தொற்றுநோய் தொடர்பாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் சமுதாய மருத்துவத் துறை 2008-ல் ஆய்வு செய்தது. ‘இப்பகுதியினரின் மூளையில் கட்டி ஏற்பட 1,000 மடங்கு அதிக சாத்தியக்கூறு உள்ளது. 12.6 சதவீத உயிரிழப்புகள் நரம்பியல் கோளாறாலும், 13.9 சதவீத உயிரிழப்புகள் சுவாசக் கோளாறாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழக மக்கள்தொகையில் 1.29 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா உள்ள நிலையில், இங்கு 2.8 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா உள்ளது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகளும் உள்ளன’ என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
ஆனால், எந்த சுகாதார கேடும் ஏற்படவில்லை என ஆலை நிர்வாகம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 2 அறிக்கைகளையும் ஒப்பிடும் போது, ஆலையின் அறிக்கை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
இந்த ஆலை இயங்க, சுற்றிலும் 500 மீட்டர் அகலத்தில் பசுமைப் போர்வை ஏற்படுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்தது. ஆலை நிர்வாகம் கோரியதால், பசுமைப் போர்வை பரப்பு அகலத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தன்னிச்சையாக 25 மீட்டராக குறைத்தது. ஆலையில் மொத்த பரப்பில் 25 சதவீதத்துக்கு பதிலாக 12.1 சதவீதம் மட்டுமே பசுமைப் போர்வை இருப்பதாக 2011-ல் வெளியிடப்பட்ட ‘நீரி’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விதிகளுக்கு முரணாக, இவ்வாறு அளவை குறைக்கும் அதிகாரம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இல்லை.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு குறித்து துறை நிபுணர்கள் கூறியதாவது:
சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த ஜெயராமன்: நிபந்தனை மீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்புகிறது. அதற்கு ஆலை நிர்வாகம், அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு வருவதாக உறுதி அளித்ததால், நடவடிக்கை முடித்து வைக்கப்பட்ட தாக அரசு முதன்மைச் செயலர் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.
‘இது பொறுப்பற்ற செயல். இத்தனை ஆண்டுகளாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எப்படி இயங்கி வந்துள்ளது என்பதையே அவரது பதில் காட்டுகிறது. இதன் அடிப்படையில், பொது வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, குற்ற வழக்கும் தொடர வேண்டும்’ என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் வழக்கறிஞர் டி.நாகசைலா: இது நீதிபதிகளால் முற்றிலும் அறிவியில் ரீதியில் மிக நேர்த்தியாக பொறுமையுடன் பகுப்பாய்வு செய்து வழங்கப்பட்ட தீர்ப்பு. தவிர, இந்த வழக்கில், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற அனைத்து வழக்கு விவரங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த வழக்கில், எதிர்மனுதாரர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தொழில்நுட்ப ரீதியிலான தரவுகளை அதிக அளவில் பெற்று, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அவற்றின் அடிப்படையில், அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் செய்யத் தவறியதை நீதிபதிகள் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வழக்கு முழு வெற்றி பெற இதுவும் ஒரு காரணம். சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT