Published : 27 Aug 2020 08:00 AM
Last Updated : 27 Aug 2020 08:00 AM

ஆன்லைனில் வாங்கிய ரூ.350 போர்வைக்கு ரூ.12 லட்சம் கார் பரிசு என நூதன மோசடி: போலீஸிடம் சென்றதால் தப்பிய பஞ்சர் கடைக்காரர்

சென்னை

ஆன்லைனில் ரூ.350-க்கு வாங்கிய போர்வைக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் பம்பர் பரிசாக கிடைத்துள்ளதாக கூறி, சென்னையில் பஞ்சர் கடை நடத்துபவரிடம் பண மோசடி முயற்சி நடந்துள்ளது. எச்சரிக்கையான அவர் உடனடியாக காவல் நிலையம் சென்றதால், மோசடியில் இருந்து தப்பினார்.

சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பழைய மகாபலிபுரம் சாலையில் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 28-ம் தேதி ரூ.350 மதிப்புள்ள போர்வையை ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கியுள்ளார்.

அதன் பிறகு 2 வாரங்கள் கழித்து, ‘ஆன்லைனில் பொருள் வாங்கியதற்காக சிறப்பு பரிசு காத்திருக்கிறது’ என்று சுரேஷின்
செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஆன்லைன் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றும் சுஜித்
பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டு, ஒரு இளைஞர் அவரை தொடர்பு கொண்டு பேசினார். ‘‘ஆன்லைனில் நீங்கள் வாங்கிய
போர்வைக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கார் பம்பர் பரிசாக கிடைத்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அந்த இளைஞர், ‘‘ரூ.12.80 லட்சத்துக்கான காருக்கு 1 சதவீத வரியாக ரூ.12,800-ஐ நான் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்பினால், கார் வீடு தேடி வரும்’’ என்று தெரிவித்தார்.

எச்சரிக்கையான சுரேஷ், இதுபற்றி செம்மஞ்சேரி போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்பு
கொண்டு போலீஸார் பேசினர். பேசுவது காவல் துறையினர் என்பதை தெரிந்துகொண்ட நபர், செல்போனை ஆஃப் செய்துவிட்டார்.
சுரேஷை மோசடி செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது போல நூதன முறையில் மோசடி
நடக்க வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x