Published : 26 Aug 2020 07:23 PM
Last Updated : 26 Aug 2020 07:23 PM
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த புகார் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியை விடுவிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது அவர் பெயரைச் சொல்லி போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
4 கோடியே 32 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் செந்தில் பாலாஜி, பிரபு, சகாயராஜன், அன்னராஜ், ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்கள் நடத்திய சோதனையின்போது வழக்குத் தொடர்புடைய ஆண்டுகளில், சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுய விவரக் குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள், அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பெற்ற பணம் குறித்த விவரங்களின் பட்டியல் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ், வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுத்து அவர் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விடுவிக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யபட்டதை அடுத்து, இந்த வழக்கில் செப்டம்பர் 8-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு தொடங்கும் எனவும் நீதிபதி ரமேஷ் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT