Published : 26 Aug 2020 06:06 PM
Last Updated : 26 Aug 2020 06:06 PM
தேனி மாவட்டம் டாப்ஸ்டேஷன் மலைப்பாதையை இரும்பு கேட் அமைத்து வனத்துறையினர் மூடி உள்ளனர். இதனால் விளைபொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி குரங்கணி அருகே டாப்ஸ்டேஷன் எனும் மலைகிராமம் உள்ளது. குரங்கணி வரை பேருந்து போக்குவரத்தும் அதன்பின்பு ஜீப் மூலமும் இக்கிராமத்திற்குச் செல்ல வேண்டும்.
இப்பாதையின் பெரும்பகுதிவனத்துறைக்கும், சில இடங்கள் தனியாருக்குச் சொந்தமான பகுதியிலும் அமைந்துள்ளது.
இங்குள்ள டாப்ஸ்ஸ்டேஷன், முட்டம், மேல்முட்டம், முதுவான்குடி உள்ளிட்ட பகுதியில் 2ஆயிரத்து 800ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
பலா, இலவம், ஏலக்காய் உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. விளைபொருட்களை குரங்கணி அல்லது போடி வரை ஜீப்பில் கொண்டு வந்து பின்பு டிராக்டர், லாரிகள் மூலம் உள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் டாப்ஸ்டேஷனிற்கு அருகில் உள்ள வட்டவடை, சிட்டிவாரை, செருவாரை, கிராம்ஸ்லேண்ட், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 23 மலைகிராமங்களிலும் கரோனா ஊரடங்கினால் விளைபொருட்களை செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக தேவிகுளம், மூணாறு வழியே இப்பொருட்கள் கொண்டு செல்லப்படும். போக்குவரத்து இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் டாப்ஸ்டேஷன், குரங்கணி வழியே தற்போது விளைபொருட்களை கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த சிலர் சட்டத்திற்கு புறம்பாக சுற்றுலாப் பயணிகளை மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி குரங்கணி-டாப்ஸ்டேஷன் பாதையை வனத்துறையினர் அடைத்து விட்டனர். இதனால் இப்பகுதி மலைகிராம மக்கள் விளைபொருட்களை ஜீப்பில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குதிரைகளில் இவற்றை கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன் உரிய நேரத்தில் பொருட்களையும் கொண்டு செல்ல முடியவில்லை.
உடல்நலக்குறைவு போன்ற நேரங்களில் டோலி கட்டியே பலரும் சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டியதுள்ளது என்று மலைகிராம மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் கூறுகையில், இது ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பாரம்பரிய பாதையாகும்.
1870-ம் ஆண்டுகளில் தேவிகுளம் பகுதியில் தேயிலை பயிரிட்ட போது தமிழக தொழிலாளர்களை அழைத்துச் செல்லவும், பிரிட்டிசார் எளிதில் கொச்சி செல்லவும் இப்பாதையை உருவாக்கினர். 30 பழங்குடியினர் குடும்பங்களும் இங்கு உள்ளது.
இந்நிலையில் இப்பாதையை வனத்துறையினர் அடைத்து வைத்துள்ளதால் கேரட், கோஸ், உருளைக்கிழக்கு போன்றவற்றை தரைப்பகுதிக்கு கொண்டு வர மிகச் சிரமமாக இருக்கிறது. குதிரை மூலம் கொண்டு வருவதால் அதிக செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது. எனவே விவசாய பயன்பாட்டிற்காக இப்பாதையை மீண்டும் திறந்து விட வேண்டும் என்றார்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், திண்டுக்கல் வனக்கோட்டத்தில் இது போன்று 95 நடைபாதை உரிம மலைப்பாதைகள் உள்ளன. விவசாயப் பயன்பாட்டிற்காக இப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சமீபகாலமாக மது அருந்துதல், தடையை மீறி மலையேற்றம் உள்ளிட்டவற்றிற்காக சிலர் பயன்படுத்தத் துவங்கினர். எனவே இப்பாதை அடைக்கப்பட்டது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT