Published : 26 Aug 2020 05:10 PM
Last Updated : 26 Aug 2020 05:10 PM

ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும்: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஆக.26) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு முழுவதும் ஊர்க்காவல் படையில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். காவல்துறை நிர்வாகத்திற்கு, பெரும் பணிபுரியும் இவர்களுக்கு தினசரி ரூ.150 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக நடந்த சட்டப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றம், ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 560 ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 30 நாளும் வேலை வழங்கி வந்ததை நிறுத்தி, மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறது.

இதனால் ஊர்க்காவல் படையினர் வாழ்க்கை நடத்த முடியாத நெருக்கடிக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் மேலும் அதிகரிக்காமல் தடுக்க, தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும்".

இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x