Published : 26 Aug 2020 04:33 PM
Last Updated : 26 Aug 2020 04:33 PM
அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி வழங்குவதில் தாமதம் செய்வது ஊழலை அதிகரிக்கவும், குற்றவாளிகளுக்கு ஆவணங்களை அழிக்கவும் வாய்ப்பு அளிக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ராஜசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கவே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வெளிப்படையாக நிர்வாகம் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்வது அரசின் கடமை. பொது ஊழியர்கள் மத்தியில் நேர்மை, ஒழுக்கம் கொஞ்சம் கொஞ்மாக மறைந்து வருகிறது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டத்திலேயே புகாரை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் விசாரணைக்கு அனுமதி வழங்குவதில் வெற்றிகரமாக தாமதம் செய்யப்படுகிறது.
குறிப்பாக ஊழல் வழக்குகள் முடிவுக்கு வர 20 முதல் 25 ஆண்டுகளாகிறது. இதனால் குற்றவாளிகள் சுலபமாக தப்பிவிடுகின்றனர். விசாரணையை தாமதப்படுத்துவது ஊழல் அதிகரிக்க காரணமாக அமைகிறது.
இந்த வழக்கில் மனுதாரர் 19.11.2019-ல் அனுப்பிய புகாரை விசாரிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புச ட்டப்படி அனுமதி வழங்க 8 மாதமாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனு திருப்தியாக இல்லை. விசாரணைக்கு அனுமதி வழங்கும் நிலையில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டால் குற்றவாளிகளுக்கு ஆவணங்களை அழிக்க போதுமான அவகாசம் வழங்கியது போலாகும்.
எனவே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புச் சட்டப்பிரிவு 19 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 197-ன் கீழ் ஊழல் புகாரை விசாரிக்க அனுமதி வழங்க தற்போது பின்பற்றப்படும் நடைமுறை என்ன? அனுமதி வழங்குவதற்கான கால அவகாசம் என்ன?
இரு பிரிவுகளிலும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார் மீது தனிநபர்கள் அனுமதி பெற என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? இவ்வாறு எத்தனை தனிநபர்கள் அனுமதி கேட்டுள்ளார்கள்? அவர்களின் கோரிக்கையின் தற்போதைய நிலை என்ன?
தமிழகத்தில் ஊழல் புகார்கள் விசாரணை தொடர்பாக அனுமதி கேட்டு வரப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் எத்தனை? இந்த மனுக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும்? விசாரணைக்கு அனுமதி வழங்குவது எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது? என்பது தொடர்பாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையர்/ தலைமை செயலர் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
பின்னர் விசாரணை செப். 8-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT