Published : 26 Aug 2020 04:28 PM
Last Updated : 26 Aug 2020 04:28 PM

கீழடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம்; பெரும்பாலான மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

கீழடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழையும், நான்கு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டிப் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

கயத்தாறு (தூத்துக்குடி) 7செ.மீ., வானமாதேவி (கடலூர்) 5 செ.மீ., சோழவந்தான் (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), ஆண்டிபட்டி (மதுரை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பஞ்சப்பட்டி (கரூர்), தாத்தையங்கார்பேட்டை (திருச்சி) தலா 4 செ.மீ., வந்தவாசி (திருவண்ணாமலை), கமுதி (ராமநாதபுரம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஆகஸ்ட் 26-ம் தேதி அன்று வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 26, 27 ஆம் தேதிகளில் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்டு 27 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x