Published : 26 Aug 2020 03:55 PM
Last Updated : 26 Aug 2020 03:55 PM

சர்வதேச நாய் வளர்ப்பு தினம்; சமூக நாய்களைக் கொண்டாடும் ‘நன்றி மறவேல்’ கூட்டமைப்பு!

இன்று சர்வதேச நாய் வளர்ப்பு தினம். கோபம், சந்தோஷம் என நமது உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய குணம் இருப்பதால்தான் செல்லப்பிராணிகளான நாய்களை வீடுகளில் குழந்தைகளைப் போல வளர்க்கிறார்கள். மனித குலத்துக்குத் துணையாக மட்டுமில்லாது பாதுகாப்பாகவும் இருந்துவரும் நாய்களைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வைப் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 26-ம் தேதி சர்வதேச நாய் வளர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால், “இந்த அங்கீகாரம் எல்லாமே விலைகொடுத்து வாங்கி வீட்டுக்குள் வளர்க்கப்படும் அந்நிய நாட்டு நாய்களுக்கு மட்டும்தானா... தெருநாய்கள் என்று பட்டம் கட்டி வீதிக்குத் துரத்தப்பட்ட சமூக நாய்களுக்கு இல்லையா?” எனக் கேள்வி எழுப்புகிறார் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நாய்களுக்காக ‘நன்றி மறவேல்’ என்ற கூட்டமைப்பை நடத்தி வரும் மாரிக்குமார்.

மதுரையைச் சேர்ந்த மாரிக்குமார் தனது வீட்டிலும் அலுவலகத்திலும் இருபது நாய்களை வளர்க்கிறார். அத்தனையும் தெருவில் திரியும் சமூக நாய்கள். அத்துடன் சேர்த்து தினமும் விருந்தினராக வந்து போகும் மேலும் 50 சமூக நாய்களுக்கும் மாரிக்குமார் வீட்டு சோற்றுப் பானை மூன்று வேளை அன்னமிடுகிறது. கரோனா காலத்தில் அன்றாடங்காய்ச்சி மக்கள் எந்த அளவுக்கு உணவுக்காகக் கஷ்டப்படுகிறார்களோ அதற்கு நிகரான துயரத்தை சமூக நாய்களும் சந்தித்து வருகின்றன. இதைப் புரிந்து கொண்டு மதுரையில் மாரிக்குமாரும் அவரது இயக்கத்தைச் சேர்ந்த அன்பர்களும் தங்களால் முடிந்த அளவுக்குச் சமூக நாய்களைத் தேடிப்போய் உணவளித்து, அவற்றின் பசி போக்கி வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசினார் மாரிக்குமார்.

“தெருநாய்கள் என்ற பதமே தவறு. அவற்றைச் சமூக நாய்கள் என்று சொல்ல வேண்டிய சூழலில் இருக்கின்றோம். காரணம், நமது தாத்தா, முப்பாட்டன் காலந்தொட்டு நாய்கள் நமது வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்ந்தவை. நாகரிக வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்குப் போகப்போக, வீட்டுக்குள் இருந்த நாய்களைத் தெருவில் தள்ளித் தெருநாய்கள் ஆக்கிவிட்டு அந்நிய நாட்டு நாய்களை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம்.

நாய்கள் மனிதனைக் கடிப்பதற்காகப் படைக்கப்பட்ட பிராணிகள் அல்ல. நாம்தான் கடிப்பதற்கான நெருக்கடியை அவற்றிற்கு உண்டாக்குகிறோம். நாய்களால் மனிதனுக்கு வரக்கூடிய இன்னல்களைவிட மனிதர்களால் நாய்களுக்கு வரக்கூடிய இன்னல்கள்தான் மிக மிக அதிகம். சாதாரண நாட்களிலேயே சமூக நாய்களின் பாடு திண்டாட்டமாக இருக்கும். கரோனா காலத்தில் அவற்றின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உண்டாகிவிட்டது. உதாரணத்துக்கு மதுரையை எடுத்துக் கொண்டால், வீட்டில் வளர்க்கப்பட்ட சமூக நாய்களைக் கொண்டு வந்து பாண்டிகோயில் பகுதியில் விட்டுச் செல்கிறார்கள்.

பாண்டிகோயில், முன்பு காடாக இருந்தது. கோயில் இருப்பதால் நாய்களுக்கு உணவுக்கும் பிரச்சினை வரவில்லை. ஆனால், இப்போது அந்தப் பகுதியில் நான்கு வழிச்சாலை வந்துவிட்டதால் அது நாய்களுக்குக் கொலைக்களமாக இருக்கிறது. கரோனாவால் கோயிலில் கறிச்சாப்பாடும் இப்போது இல்லை. இதனால் இங்கு கொண்டு வந்துவிடப்படும் சமூக நாய்கள் போவதற்கு வழி தெரியாமல் சாலையில் அடிபட்டுச் சாகின்றன. நாய் கடித்து இறப்போர் குறித்துப் புள்ளிவிவரம் வைத்திருக்கும் அரசும் மக்களும் இப்படி அநியாயமாகப் பலியாகும் நாய்கள் குறித்த புள்ளிவிவரங்களை வைத்திருப்பதில்லை.

கரோனா காலத்தில் சமூக நாய்களுக்கு நாங்கள் தேடிப் போய் உணவும் தண்ணீரும் கொடுப்பதைப் பார்த்துவிட்டு இன்னும் சிலரும் தங்கள் பகுதியில் அதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். வாட்ஸ் அப்பில் நாங்கள் பகிர்ந்த சமூக நாய்களின் குட்டிகள் சிலவற்றைப் பாசத்துக்குரிய மக்கள் சிலர் தத்தெடுத்துக் கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதேபோல் சமூக நாய்களுக்கு உணவளித்த சிலரோடு ஏரியாவாசிகள் சண்டைபிடித்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

தெருக்களில் ஆடு- மாடுகளை வளர்த்து வணிகம் செய்பவர்களுக்கும் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கும் சமூக நாய்கள் இடைஞ்சலாக இருக்கின்றன. அவர்கள் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாமல் நாய்களை விஷம் வைத்துச் சாகடிக்கிறார்கள். சமூக நாய்களைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறவர்கள் பெண் நாய்க் குட்டி என்றால் முகம் சுளிக்கிறார்கள். அவர்களிடம், ‘அப்படியெல்லாம் இனம் பார்த்து ஒதுக்க வேண்டாம். பெண் நாய்க் குட்டிகளையும் எடுத்து வளருங்கள். தேவைப்பட்டால், அந்தக் குட்டிக்குப் பருவம் வந்ததும் நாங்களே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து தருகிறோம்’ என்று சொல்லிப் பெண் நாய்க் குட்டிகளையும் தத்தெடுக்க வைத்து வருகிறோம்.

சமூக நாய்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து எந்தப் பதிவுகளும் நம்மிடம் இல்லை. ஆனால், அரிதிலும் அரிதாக எங்காவது ஒரு நாய் யாரையாவது கடித்துவிட்டால், கடித்துக் குதறியது என்று பெரிய விஷயமாகப் பதிவிடப்படுகிறது. இது வீட்டுக்குள் வைத்து வளர்க்கப்படும் அந்நிய நாட்டு நாய் வணிகத்தை ஊக்குவிக்கும் விஷயமாக அமைந்து விடுகிறது. நமது பெற்றோரையும் உறவுகளையும் கொண்டு போய் அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு எங்கோ ஓரிடத்தில் நடக்கும் இயற்கைப் பேரிடருக்கு நன்கொடை அனுப்பிய கதைதான் இது.

மனிதனுடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான் அந்நிய நாட்டு நாய்களை வளர்க்கும் கலாச்சாரமாக மாறி இருக்கிறது. அந்நிய நாட்டு நாய்களை வளர்த்தால் தங்களின் சமூக அந்தஸ்து கூடும் என நினைக்கும் தாழ்வு மனப்பான்மைதான் இதற்குக் காரணம். மனிதர்களைக் கடிப்பதற்காகப் படைக்கப்பட்டவை அல்ல நாய்கள். ஆனால், மனிதன்தான் அவற்றுக்குக் கடிநாய், தெருநாய், வெறிநாய் எனப் பட்டம்கட்டி விடுகிறான்.

சமூக நாய்களுக்குத் தெருக்கள்தான் வசிப்பிடம். எனவே, அவற்றைத் தெருவில் இருக்கக்கூடாது என்று சொல்லித் துரத்த யாருக்கும் உரிமை இல்லை. வீட்டுக்குள் வசிக்க நமக்கு என்னவெல்லாம் உரிமை இருக்கிறதோ அதுபோல தெருவில் வசிப்பதற்கான அனைத்து உரிமைளும் சமூக நாய்களுக்கு உண்டு. அரசியலமைப்புச் சட்டத்திலேயே இது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அதேசமயம், சமூக நாய்களை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு நிச்சயம் மன அழுத்தம் குறையும். காரணம், நம்மிடம் நிபந்தனையற்ற அன்பைக் காட்டுபவை சமூக நாய்கள். விரக்தியில் இருக்கும் உங்களோடு ஒரு நாய் வாலை ஆட்டிக் கொண்டு விளையாடினால் எப்படி இருக்கும். அப்படித்தான் பலபேருக்கு மன அழுத்தத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றன சமூக நாய்கள்.

கரோனா காலத்தில் எங்களால் முடிந்த அளவு சமூக நாய்களைத் தேடிப்போய் உணவளித்து இறந்துவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். முடிந்தவரை வீடுகளுக்குச் சென்று, ‘உங்களுக்குச் சமைக்கும் அரிசியில் ஒரு பிடி சேர்த்துப் போட்டுச் சமைத்து அதைச் சமூக நாய்களுக்கு வையுங்கள்’ என்று சொன்னோம். எல்லோரும் நாங்கள் சொன்னதைக் கேட்கவில்லை என்றாலும் ஒரு சிலர் நாங்கள் சொன்னபடி செய்து கொண்டிருக்கிறார்கள். வசதியானவர்களைவிட வசதியற்ற மக்களுக்குப் பட்டினியின் கொடுமை தெரியும் என்பதால் அவர்கள் எங்கள் கோரிக்கைக்குச் செவிமடுத்திருக்கிறார்கள்.

நமது மக்கள் ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அநேக வீடுகளில் அன்று அசைவம் மணக்கும். இந்த மணம் வீசிவிட்டால் சமூக நாய்களுக்கு அளவுக்கு அதிகமாக உமிழ்நீர் சுரக்க ஆரம்பித்துவிடும். அந்த வாசனைக்காக வீட்டையே ஏக்கத்துடன் வட்டமடிக்கும். யாராவது ஒரு கையளவு கறிச்சோறு போடமாட்டார்களா என்று அவை ஏங்கும். அப்படி எந்த நாயாவது உங்கள் வீட்டுவாசலில் வந்து நின்றால் அதற்கும் ஒரு கையளவாகினும் கறிச்சோறு போடுங்கள்; காலத்துக்கும் அது உங்களுக்கு வாலாட்டி, அன்பைக் கொட்டும்” என்றார் மாரிக்குமார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x