Last Updated : 26 Aug, 2020 03:16 PM

1  

Published : 26 Aug 2020 03:16 PM
Last Updated : 26 Aug 2020 03:16 PM

திமுக ஆட்சி அமையும்; மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படும்: கனிமொழி எம்.பி. உறுதி

தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் நடைபெறும் ஸ்மார்ட் சாலை திட்ட பணிகளை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டதும், மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படும் என, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், அண்ணாநகர் பிரதான சாலையில் நடைபெறும் ஸ்மார்ட் சாலைப் பணி மற்றும் மழைநீர் வடிகால் பணிகள், வஉசி கல்லூரி முன்பு அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகள், மீளவிட்டான் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் ஆகிய பணிகளை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:

மழைக் காலங்களில் தூத்துக்குடியில் தொடர்ந்து மழைநீர் தேங்கி மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னால் மழைநீர் வடிகால் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்பதற்காக, இதுவரை என்ன பணிகள் நடைபெற்றுள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளேன். இந்த பணிகளை விரைவாக முடிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன்.

அதுபோல ஸ்மார்ட் சிட்டி பூங்கா பணிகள் எப்படி நடைபெறுகிறது, அதனை எந்தளவுக்கு பசுமையாக அமைக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்துள்ளேன்.

மேலும், கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது தொடங்கபட்டுள்ள ஸ்மார்ட் சாலை பணிகளையும் ஆய்வு செய்துள்ளேன். அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன்.

தூத்துக்குடியில் நிலவும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நிச்சயம் விடிவு காலம் வரும். சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்று, மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்.

அதன் பிறகு தூத்துக்குடி மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றார் கனிமொழி. இந்த ஆய்வின் போது தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன், மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, உதவி ஆணையர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நிவாரண உதவி:

முன்னதாக நேற்று மாலை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கல்விளை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி முத்தார் குடும்பத்தினரையும், முறப்பநாடு அருகே குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற போது வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த பண்டாரவிளையை சேர்ந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்தினரையும் கனிமொழி எம்.பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். அப்போது தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x