Published : 26 Aug 2020 03:23 PM
Last Updated : 26 Aug 2020 03:23 PM
கரோனா பேரிடர் காலத்தில் ஆவின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் முன்பு நாளொன்றுக்கு 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 40.28 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அதேபோல் பால் விற்பனையும் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 22.89 லட்சம் லிட்டரிலிருந்து தற்போது 25 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“பால் உற்பத்தியில் தமிழ்நாட்டில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் சேவையில் ஆவின் நிறுவனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. புதிய, தூய, தரமான மற்றும் பாதுகாப்பான பாலினை நியாயமான விலையில் மக்களுக்குத் தொடர்ந்து வழங்குவதையே ஆவின் நிறுவனம் தன் அடிப்படையான குறிக்கோளாகக் கொண்டுள்ளது. ஆவின் நிறுவனம் 07.07.2020 அன்று 5 வகையான பால் பொருட்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கரோனா எனும் கொடிய வைரஸின் பெருந்தொற்று தாக்கத்தில் உலகமே நிலைகுலைந்து நிற்கும் வேளையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த இயற்கை வைத்திய முறைப்படியும் இஞ்சி, மஞ்சள், துளசி, சீரகம், பெருங்காயம், எலுமிச்சை, இந்துப்பு போன்ற மூலிகைப் பொருள்களைச் சேர்த்து மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த, தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறையின் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதிய வகை மோரை அறிமுகப்படுத்தியுள்ளது.
பால் திரிந்து போகாமல் பணம் நஷ்டம் அடைவதை தவிர்க்கும் வகையிலும் 90 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் (4.5 … கொழுப்புச் சத்து மற்றும் 8.5 … புரதச் சத்தும் கொண்டது ) குளிர் சாதனப் பெட்டியைத் தவிர்த்து , அறை வெப்பநிலையில் இருக்கும் வகையில் சாதகமான பேக்குகளில் ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
ஆவின் நிறுவனம் இதுவரை அதிகபட்சமாக 6% கொழுப்புச் சத்து மற்றும் 9% இதர சத்தும் உள்ள பாலை மட்டும் விற்பனை செய்த நிலையில் 6.5 % மற்றும் 9% புரதச் சத்து கொண்ட "டீமேட்" என்ற புதிய வகைப்பாலை வர்த்தக ரீதியில் டீக்கடைகள், ஓட்டல்கள் , சமையல் வல்லுநர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.
நவீன காலத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி, சுவைத்துச் சாப்பிடும் வகையில் மாம்பழம் மற்றும் சாக்லெட் சுவை கூடிய லஸ்ஸியை விற்பனைக்கு வழங்கியுள்ளது ஆவின் நிறுவனம்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 230 லட்சம் லிட்டர் பாலில் ஆவின் நிறுவனம் 40 லட்சம் லிட்டர் அதாவது 17 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்து மீதமுள்ள 83 சதவீதம் பாலில் உள்ளுர் தேவைக்காக 17% போக 16% தனியார் பால் நிறுவனங்கள் மூலமாகவும் 50% அமைப்புசாரா விற்பனையாளர்கள் மூலமாகவும் கொள்முதல் செய்யப்படுகிறது. கிராமப்புற பால் உற்பத்தியாளர் நலன் கருதி அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலைப்பட்டியல் அடிப்படையில் தரத்திற்கேற்ற விலையில் பால் பணம் வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காலத்தில் சில பால் நிறுவனங்கள் பால் கொள்முதலைக் குறைத்த நிலையிலும், தமிழகம் முழுவதும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், ஆவின் நிறுவனம் தொடர்ந்து கொள்முதல் செய்து வருகின்றது.
தனியார் பால் நிறுவனங்கள், கரோனா காலத்தில், பால் கொள்முதலை, குறைத்துக்கொண்ட போதும் பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி ஆவின் நிறுவனம் லாப நோக்கு இல்லாமல், அவர்களைப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக இணைத்து தரமான பாலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 என்ற அடிப்படையில் கொள்முதல் செய்துவருகிறது.
மேலும் 155 பால் கூட்டுறவு சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டும் 139 செயலிழந்த சங்கங்கள் புதுப்பிக்கப்பட்டும் தற்போது 9,266 பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் முன்பு நாளொன்றுக்கு 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது நாளொன்றுக்கு 40.28 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அதேபோல பால் விற்பனையும் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 22.89 லட்சம் லிட்டரிலிருந்து தற்போது 9.21 சதவீதம் உயர்ந்து நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.,
ஆவின் நிறுவனத்தின் தொடர் முயற்சியில் 495 விற்பனை முகவர்களை நியமித்து ‘சோமாட்டோ’, ‘ஸ்விக்கி’ மற்றும் ‘டன்சோ’ நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று பால் பொருட்களை விற்பனை மேற்கொள்ளுதல் மூலம் கரோனா காலத்திற்கு முன்னர் மாதம் ஒன்றுக்கு ரூ.34.78 கோடி என்ற மதிப்பு தற்போது ரூ.41.15 கோடிக்கு உயர்ந்துள்ளது.
ஊரடங்கால் அனைத்து மாநிலக் கூட்டுறவு நிறுவனங்களிலும் விற்பனை குறைந்த நேரத்தில் தமிழகத்தில் ஆவின் நிறுவனம் இந்த குறுகிய மூன்று மாத காலத்தில் என்றும் இல்லாத வகையில் விற்பனையில் சாதனை செய்ததை, மே மாதத்தில் நடைபெற்ற மத்திய அரசின் பால்வளத்துறை காணொலிக் காட்சி கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
பால் கொள்முதல் உயர்ந்ததால் விற்பனை போக மீதமுள்ள உபரிப்பால் பால் பவுடராகவும், வெண்ணையாகவும் உருமாற்றம் செய்யப்படுகிறது. தற்போது மாநில அளவில் மொத்தம் 8,400 மெ.டன் அளவு பால் பவுடர் இருப்பில் உள்ளது. இந்த பால் பவுடரை ஒரு வருடம் வரை இருப்பு வைத்துக்கொள்ள இயலும். சந்தையில் தேவை அதிகரிக்கும்போது இருப்பு வைத்துள்ள பால் பவுடரை விற்க இயலும். இதனால் ஆவினில் நஷ்டம் ஏற்படுவது தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.
ஆவின் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், தரவு நுண்ணறிவு நிறுவனமான காந்தரின் உலக பேனல் பிரிவு (World panel division of data insights company Kantar) நடத்திய ஆய்வறிக்கையில் இந்திய அளவில் பல கோடி மக்கள் தேர்வு செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் வரிசையில் ஆவின் ஏழாவது இடத்தைப் (TOP CHOSEN BRANDS) பிடித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்திய அளவில் உள்ள பால் உற்பத்தி நிறுவனங்களில் அமுல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாதிரியான ஆய்வறிக்கைகள் உறுதி செய்வதன் மூலம் நுகர்வோருக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஆவினின் வரலாற்று சாதனையான பால் கொள்முதல் (சுமார் 40 லட்சம்), பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை இந்த கரோனா காலகட்டத்திலும் சாதனையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்வாகம் எடுக்கும் சிறப்பான நடவடிக்கைகள், வணிகரீதியான செயல்பாடுகள் மூலம் ஆவின் நிறுவனம் லாபநோக்குடன் வளர்ச்சிப்பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றது.
விவசாயிகளின் தேவை அறிந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி அரசு, மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது”.
இவ்வாறு ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT