Published : 26 Aug 2020 01:47 PM
Last Updated : 26 Aug 2020 01:47 PM

குட்கா ஊழல்; அதிமுக அரசுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும் நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்: ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

மக்களின் உயிரைக் குடிக்கும் குட்கா ஊழலில் அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.26) வெளியிட்ட அறிக்கை:

"40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய குட்கா பேர ஊழலில் வருமான வரித்துறை தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை. குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. மஞ்சுநாதா திடீரென்று மாற்றப்பட்டார்.

உயர் நீதிமன்ற ஆணையின்படி விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டு, குட்கா வழக்கை விசாரித்து வந்த வி.கே.ஜெயக்கொடி ஐஏஎஸ் 5 மாதங்களில் தூக்கியடிக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்துக் கடைநிலை ஊழியரான சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்.

நவம்பர் 2018-ல் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது.

பிறகு நவம்பர் 2018-ல் ஆறு பேர் மீது மட்டும் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ. அதில், சிவக்குமார், செந்தில்முருகன் ஆகிய இரு தமிழக அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர நவம்பர் 2018-ல் சிபிஐ அனுமதி கோரியது.

20 மாதங்கள் கழித்து, அதாவது, 2020 ஜூலை மாதம் அதிமுக அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை இல்லை; இந்த மோசடிகளை இதுவரை சிபிஐ கண்டுகொள்ளவுமில்லை.

உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட ஒரு சிபிஐ விசாரணையில், வருமான வரித்துறையின் கோப்புகளையே அதிமுக அரசு காணாமல் போகச் செய்கிறது. வழக்குத் தொடரக் கேட்கும் அனுமதி கொடுக்கத் திட்டமிட்டு 20 மாதங்கள் தாமதம் செய்கிறது.

டி.கே.ராஜேந்திரனுக்கு டிஜிபி பதவி கொடுத்து, பணி நீட்டிப்புக் கொடுத்து, ஒய்வு பெறவும் அனுமதிக்கிறது. அதிமுக அரசில் உள்ள கடைநிலை ஊழியர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திலேயே உள்ள மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடி, தனக்கு எதிரான சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வழக்குப் போட அதிமுக அரசு அனுமதிக்கிறது.

இத்தனை குட்கா நாடகங்களையும், செயலிழந்த நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு, ஊழல் முதலைகள் மீது இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், சிபிஐ மயான அமைதி காக்கிறது. துரும்பு கிடைத்தால்கூட, குதிரையாகப் பாயும் சிபிஐ குட்கா லோடுகள் போல் தேவையான ஆதாரம் கிடைத்தும் சிபிஐ ஆமை வேகத்தில்கூட நகர மறுக்கிறது. அதற்குத் தடைபோட்டு வைத்திருப்பது யார்?

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை முதல்வர் பழனிசாமியும், மத்திய பாஜக அரசும் வரிந்து கட்டிக் கொண்டு, அதனால் ஏற்படும் அவமானம் பற்றிக் கவலைப்படாமல், காப்பாற்றுவதில் உள்ள அறிவிக்கப்படாத கூட்டணி என்ன?

அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை நெருங்க விடாமல் சிபிஐயைத் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது?

மக்களின் உயிரைக் குடிக்கும் குட்கா ஊழலில் அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்.

பொதுமக்கள் மத்தியில், இதில் உள்ள பங்குப் பரிவர்த்தனை தொடர்பாக நிலவிவரும் பல சந்தேகங்கள் களையப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சந்தேகங்கள் உறுதி செய்யப்பட்ட உண்மைகளாக மக்கள் மனதில் நின்று நிலைத்துவிடும். இது காலத்தின் கட்டாயம்!".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x