Published : 26 Aug 2020 01:20 PM
Last Updated : 26 Aug 2020 01:20 PM

கிளிப்பிள்ளைக்குக் கூறுவதைப் போல் கூறி வருகிறேன்; கரோனா பரவல் அதிகரிப்பு: ராமதாஸ் வேதனை

சென்னை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பைக் காரணம் காட்டி கரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணத்தையும், தமிழகத்தில் தொடர்ந்து தாம் வலியுறுத்தி வந்தும் பொதுமக்கள் அதை அலட்சியம் செய்கின்றனர் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் உலகில் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தாமதமாகப் பரவல் தொடங்கியது. தற்போது தமிழகத்திலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஆகஸ்ட் மாதத்தில் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, உ.பி., ராஜஸ்தான், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தொற்று எண்ணிக்கை கவலை தரும் விதத்தில் அதிகரித்துள்ளன.

இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளி ஆந்திரா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒரு லட்சம் என்கிற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன. மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா மாநிலங்கள் 3 லட்சத்தைக் கடந்து பெரிய எண்ணிக்கையில் உள்ளன.

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ள நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலை (36 லட்சத்து 67 ஆயிரத்து 176) பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை நோக்கி இந்தியா (32 லட்சத்து 35 ஆயிரத்து 725) வேகமாக நெருங்கி வருகிறது. இந்தியாவில் தொற்று எண்ணிக்கை பரவல் பல மாநிலங்களில் அதிகரிப்பதற்குக் காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஊரடங்கை மதிக்காததும், சமூக இடைவெளியைக் குறைக்காததும் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“ஊரடங்கை மதிக்காதது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, முகக்கவசம் அணியாதது போன்ற பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்கள்தான் இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகமாக பரவியதற்குக் காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இது சரியானது தான்.

இதையே தான் கடந்த 5 மாதங்களாக நான் கிளிப்பிள்ளைக்குக் கூறுவதைப் போல் கூறி வருகிறேன். மக்கள் அதைப் பின்பற்றாதது தான் தமிழகத்தில் கரோனா பரவக் காரணமாகும். இனியாவது மக்கள் முன்னெச்சரிக்கை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்”.

— Dr S RAMADOSS (@drramadoss) August 26, 2020

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x