Published : 26 Aug 2020 09:33 AM
Last Updated : 26 Aug 2020 09:33 AM
கோவை மாவட்ட காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 14 இடங்களில் நிரந்தர சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் கோவை-பாலக்காடு சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வாளையாறு, வேலந்தாவளம் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்கின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் பாலக்காடு மாவட்ட காவல் துறையினர் வாளையாறில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் மற்றும் போதைப் பொருட்களை வாகனங்களில் கடத்திச் சென்றவர்களைப் பிடித்தனர். இதுபோன்ற சட்ட விரோத செயல்களைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்த கோவை மாவட்ட போலீஸார் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக ஆய்வு நடத்தியதில், கருமத்தம்பட்டியிலிருந்து நீலாம்பூர், மதுக்கரை, எட்டிமடை, க.க.சாவடி வழியாக கேரள மாநில எல்லை வரை செல்லும் 30 கிலோ மீட்டர் எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் காவல் துறையின் சோதனைச் சாவடிகள் எதுவும் இல்லை என்பதும், கருமத்தம்பட்டி, சூலூர், செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி உள்ளிட்ட காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட இப்பகுதியில் செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்யும் போலீஸார், வெளியேறும் வாகனங்களை சோதனை செய்வதில்லை என்பதும் தெரியவந்தது. இதனால், சட்டவிரோத செயல்களுக்கு இச்சாலையை மர்ம நபர்கள் பயன்படுத்தி வந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.
இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கூறும்போது, "கோவை மாவட்டத்தில் கண்காணிப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் குறிப்பிட்ட இடத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கவும், அங்கு 24 மணி நேரமும் காவல் துறையினரை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படுவதுடன், அவற்றில் ஈடுபடுவோர் மாவட்டத்தை விட்டு வெளியேறுவதை தடுக்கவும், கைது செய்யவும் முடியும்.
மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காவல் துறையால் பொருத்தப்பட்ட கேமராக்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT