Published : 26 Aug 2020 06:54 AM
Last Updated : 26 Aug 2020 06:54 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் விரைவில் 118 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள்: கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு கடன் உதவிகள் வழங்கும் விழாவில், 16 பேருக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான டிராக்டர்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இந்நிகழ்வில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளுர் மாவட்டத்தில் 118 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் விரைவில் தொடங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில், கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் சிறப்பு கடன் உதவிகள் வழங்கும் விழா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைஅமைச்சர் பாண்டியராஜன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கிரேஸ் லால்ரின்டிக்கி பச்சாவ், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, பொன்னேரி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர் எம்எல்ஏக்களான பலராமன், நரசிம்மன், விஜயகுமார், அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, மூர்த்தி, முன்னாள் எம்பி அரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 1,584 பேருக்கு ரூ.6.31 கோடி கடன் உதவி, மாற்றுத்திறனாளிகள் 27 பேருக்கு ரூ.8.50 லட்சம் கடன் உதவி, 1,289 விவசாயிகளுக்கு ரூ.10.34 கோடி விவசாய கடன், 16 பேருக்கு ரூ.1.30 கோடி டிராக்டர் கடன் என 4,694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் வழங்கினர்.

நிகழ்வில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மண்டலத்தில் 2011 முதல் 31.07.2020 வரை 1,75,008 விவசாயிகளுக்கு ரூ.988.47 கோடி பயிர் கடனும், நடப்பாண்டில் 31.07.2020 வரை 3,563 விவசாயிகளுக்கு ரூ.29.29 கோடி வட்டியில்லா விவசாய கடனும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் வரை திருவள்ளூர் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 76,935 பேருக்கு ரூ.123.06 கோடி பயிர் காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மண்டலத்தில் கடந்த ஜூலை வரை 9,590 ருபே டெபிட் கார்டுகள் மற்றும் 17,992 ருபே விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் விரைவில் 118 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்படும். இதன் மூலம் மாவட்டத்தில் 23,125 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x