Published : 02 May 2014 08:55 AM
Last Updated : 02 May 2014 08:55 AM

ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு : தலைவர்கள் கண்டனம்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மு.கருணாநிதி (திமுக தலைவர்)

இரண்டு நாட்களுக்கு முன்பு ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது. அதன்பிறகு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முறைப்படியான முழுமையான விசாரணை கள் முன்கூட்டியே நடைபெற்றிருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம். தீவிரவாதிகள் மேலும் என்னென்ன திட்டமிட்டிருக் கிறார்கள் என்பது பற்றி நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் காவல் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பி.எஸ். ஞானதேசிகன் (தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்)

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தீவிரவாத அமைப்புகள் உலா வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தீவிரவாதம் எந்த ரூபத்தில், யாருக்கு ஆதரவாக வந்தாலும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். திறமைமிக்க காவல்துறையினர் இதன் பின்னணியில் செயல்படும் ஆணி வேரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

தா.பாண்டியன் (மாநிலச் செயலாளர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

பயங்கரவாதக் குழுக்கள் பொதுமக்கள் கூடித் தொழுகிற மையங்கள், சந்தை, பேருந்து சந்திப்பு, ரயில் நிலையம் என ஒரு பாவமும் அறியாத நிரபராதி மக்கள் கூடுகிற இடங்களிலேயே தாக்குதலை நடத்துகிறார்கள். இத்தகைய குழுக்கள் என்ன காரணங்களைக்கூறி இந்தக் கொடுஞ் செயலில் ஈடுபட்டாலும், அது ஏற்கத்தக்க போர் முறை அல்ல. இது முளையிலேயே கிள்ளப்பட வேண்டும். சாதி, மத, கட்சி வேறுபாடு பாராது அனைவரும், பயங்கரவாதப் போக்கைத் தடுத்து, மக்களைக் காக்க உதவ வேண்டும்.

ஜி. ராமகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

குண்டுவெடிப்பு வன்முறைச் செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறோம். இந்த பயங்கரவாத செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)

மத்திய உளவு பிரிவு போலீஸார் தமிழக உளவு பிரிவிற்கு முன் கூட்டியே இது குறித்து தகவல் கொடுத்தும், தமிழக காவல்துறை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஈவு, இரக்கமின்றி மனித உயிர்களை கொன்று குவிக்கும் இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

பாகிஸ்தான் உளவு அமைப்பின் முகவராக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாது காப்பு வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல் துறை அறிவித்திருந்தது. அப்படி அறிவிக்கப் பட்ட 24 மணி நேரத்திலேயே இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட வர்களை உடனடியாக கைது செய்து மக்களின் அச்சத் தைப் போக்க வேண்டும்.

வைகோ (பொதுச் செயலாளர்.ம.தி.மு.க)

பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் இக்கொடுங்குற்றத்தில் ஈடுபட்டோர், அதன் பின்னணியில் இயக்கியோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டோருக்குப் பலத்த கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிர் இழந்த இளம்பெண் சுவாதி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தோர் முழுநலம் பெற விழைகிறேன்.

ஆம் ஆத்மி கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்து முன்னணி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி,அகில இந்திய தேசிய லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த், அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x