Published : 25 Aug 2020 04:29 PM
Last Updated : 25 Aug 2020 04:29 PM

நிலமற்ற ஏழை கிராமப் பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்: கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டம்

நாகர்கோவில்

சொந்த நிலம் இல்லாத, விவசாயப் பின்னணி கொண்ட ஏழ்மையான கிராமப்புற மகளிரைத் தேர்ந்தெடுத்து ‘அக்ரோடெக்’ என்னும் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் விலையில்லா ஆடுகளை விநியோகித்து வருகிறது. மத்திய அரசின் பங்களிப்போடு கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இந்த முயற்சி கிராமப்புற மகளிர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையொட்டி, நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் கிராமத்தில் வசிக்கும் ஏழைப் பெண்களுக்குத் தலா 2 ஆடுகள் வீதம் இலவசமாக இன்று விநியோகிக்கப்பட்டது. இந்த ஆடுகளை விவசாயத்தில் ஆர்வமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும் இருக்கும் மகளிர் வளர்த்து அதன் மூலம் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம். இதற்கான, பயிற்சி முதல் விற்பனை வரை அனைத்து விஷயங்களுக்கும் செயலிகளின் வழியே ஆலோசனையும் கூறுகிறார்கள். விவசாயிகளை விற்பனையாளராகவும் மாற்றும் பயிற்சி இதில் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பங்களிப்போடு முழுக்க இலவசச் சேவையாகவே இது மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘அக்ரோடெக்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாணிக்கம், “இந்தியாவில் நிலமற்ற ஏழை, எளிய மகளிரின் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரமும் உயரும். இதைச் செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்தியா முழுவதும் பல்வேறு விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்துக்கும் வழிகாட்டியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இதைச் செயல்படுத்தி வருகிறோம்.

இதில் பயனைடைய விரும்புவோருக்குச் சொந்த நிலம் இருக்கக் கூடாது. கிராமப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் மகளிராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மகளிரை ஒருங்கிணைத்து மகளிர் குழுக்களாகக் கட்டமைக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 பெண் ஆடுகளை விலையின்றிக் கொடுப்போம். கொடுக்கும்போதே நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும் அந்த ஆடுகள் ஒவ்வொன்றும் தலா ரூ.5 ஆயிரம் வரை விலை மதிப்புள்ளதாக இருக்கும். விவசாயிகளைப் பொறுத்தவரை அவர்கள் நல்ல உற்பத்தியாளர்களாக இருப்பார்கள். ஆனால், நல்ல வியாபாரிகளாக இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம்.

தமிழக அரசின் விலையில்லா ஆடு விநியோகிக்கும் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இதில் மகளிர் ஆட்டைப் பெறும்போதே எங்கள் நிறுவனத்தில் உறுப்பினர் ஆகிவிடுகிறார். நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களைப் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வைக்க உதவுவோம். எங்கள் வழிகாட்டுதல்படி ஆடுகளை வளர்த்து வந்தால், ஒரு பெண் 60 ஆடுகளை உருவாக்க முடியும். அந்த நிலையை அடைவதற்கான பயிற்சி வகுப்புகள், இனப்பெருக்க காலம் குறித்த தகவல்கள், சத்தான தீவனம் வழங்குதல் ஆகியவற்றையும் கண்காணித்து வழிகாட்டுவோம்.

ஒரு பயனாளியின் ஆடு குட்டி போட்டு அது ஆணாக இருக்கும்பட்சத்தில் அதை வாங்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பெண் ஆட்டைக் கொடுத்துவிடுவோம். ஆடுகளை அவர்களது நெருக்கடியான காலத்தில் விற்க நேர்ந்தால், எடைக்கு ஏற்ற சரியான விலை கிடைக்கவும் உதவுகிறோம்.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கிராமப்புற மகளிரின் பொருளாதாரத்துக்கு ஆடு வளர்ப்பே பெரிதும் கைகொடுக்கிறது. தமிழகத்தில் கிராமப்புற மகளிருக்கு ஆடு வளர்ப்பின் முக்கியத்துவம் இன்னும்கூட பரவலாகத் தெரியவில்லை. சீனி, கொடி, கன்னிரகம் என நமது பாரம்பரிய ஆடுகளையே நாங்கள் வழங்குகிறோம். அதனால் இந்த தட்பவெட்ப சூழலுக்கு அவை நன்றாக வளரும். இந்த ரக ஆடுகள் ருசியாக இருப்பதால் சந்தை வாய்ப்பும் அமோகமாக இருக்கும். ஆடு வளர்ப்புக்கான பயிற்சி முகாம், எடைக்குத் தகுந்த விலை கிடைக்கச் செய்வது ஆகியவற்றையும் ஆன்லைன் வழியே சாத்தியப்படுத்துகிறோம். கூகுள் ப்ளே ஸ்டோரில் இவற்றுக்கு என பிரத்யேகச் செயலிகளையும் அமைத்துள்ளோம்.

இப்போது விவசாயிகள் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. வாட்ஸ் அப், முகநூல் என அவர்களும் சமகால ஓட்டத்துக்கு இணையாக இருக்கிறார்கள். அதற்குள் இருக்கும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பைக் காட்டுகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், நாகர்கோவில், புதுச்சேரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி விலையில்லா ஆடுகளை விநியோகித்திருக்கிறோம். கிராமப்புற மகளிரில் விவசாயத்தில் ஆர்வம் இருப்பவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆடு வழங்கவும், அவர்களைப் பொருளாதாரத்தில் மேம்படுத்த இலவசப் பயிற்சி வழங்கவும் தயாராக உள்ளோம்.

எங்களின் வழிகாட்டுதல்படி இரண்டு ஆடுகளையும் வளர்த்து வந்தால் மூன்றாம் ஆண்டு இறுதியில் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடுகள் ஒவ்வொரு பயனாளியிடமும் இருக்கும். இந்தத் திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் கரோனாவால் சரிந்திருக்கும் கிராமப் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x