Published : 25 Aug 2020 03:55 PM
Last Updated : 25 Aug 2020 03:55 PM
10-வது முறையாக ரூ.10 ஆயிரத்தை யாசகர் பூல்பாண்டி கரோனா நிதியாக மதுரை ஆட்சியரிடம் இன்று வழங்கினார். அவர் தன்னைப்போல் யாரும் யாசகம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன், கடந்த 3 மாதமாக கரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி.வினயிடம் ரூ.10 ஆயிரம் வீதம் 9 முறையாக ரூ.90 ஆயிரம் வழங்கினார்.
யாசகர் ஒருவர் யாசகம் பெற்ற பணத்தை தனக்காக சேமித்து வைக்காமல் அதை பொதுநலனுடன் ஆட்சியரிடம் கரோனா நிவாரண நிதியாக திருப்பி ஒப்படைத்தது அனைவரையும் நெகிழ்ச்சியடை செய்தது.
அதனால், மாவட்ட ஆட்சியர் வினய், சுதந்திர தினவிழாவில் அவருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். யாசகர் ஒருவர், இதுபோன்ற அரசு விழாவில் கவுரவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் இன்று 10-வது முறையாக மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பூல்பாண்டி, மீண்டும் ரூ.10 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதியாக ஆட்சியர் டிஜி.வினயிடம் வழங்கினார்.
பூல்பாண்டியன் இதுவரை தலா 10ஆயிரம் வீதம் 10 முறை என மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் யாசகம் பெற்ற பணத்தினை கரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
இவர் ஏற்கெனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி வழங்கியுள்ளதோடு, அரசு பள்ளிகளுக்கும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் நிதியுதவி செய்துள்ளார்.
இதுகுறித்து பூல்பாண்டியன் கூறுகையில், ‘‘எனக்கு யாசகம் மட்டுமே கேட்கத் தெரியும், ஆனால் யாசகம் கொடுக்கத் தெரியாது என்பதால் ஏழைகளுக்கு உதவி சென்றடையும் என்பதால் அரசிடம் கரோனா நிதி வழங்குகி வருகிறேன்.
என்னைப் போல யாசகம் பெறும் பழக்கத்தை மற்றவர்கள் தவிர்க்க வேண்டும். உழைத்து மட்டுமே உண்ண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
எனக்கு பணத்தின் மீது ஆசை இல்லாத காரணத்தால் நான் யாசகம் பெறும் பணத்தை உதவிக்காக வழங்குகிறேன், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT