Published : 25 Aug 2020 03:26 PM
Last Updated : 25 Aug 2020 03:26 PM
கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 'பயோ மைனிங்' முறையில் கழிவுகளை மக்கச் செய்யும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏவான கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
"வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டுள்ள சுமார் 20 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளால், வெள்ளலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துர்நாற்றம், சுகாதாரச் சீர்கேடு, நிலத்தடி நீர் மாசு, காற்று மாசு மற்றும் தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல பிரச்சினைகளை இப்பகுதி மக்கள் எதிர்கொள்கின்றனர். மேலும், குப்பைக் கிடங்கில் எந்த ஒரு மருந்தும் அடிக்கப்படுவதில்லை.
நீண்டகாலமாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இங்குள்ள குப்பைகளை மேலாண்மை செய்ய, கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், 'வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்குக் கொண்டுவரப்படும் குப்பைகளின் அளவைக் குறைக்க மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 69 இடங்களில் சிறு மறுசுழற்சி மையங்கள் (மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்) அமைக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் 12 மையங்கள் முழுமையாகக் கட்டப்பட்டு விட்டன. இதனால் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குப்பைகள் சேர்வது பெருமளவில் குறைக்கப்படும்' என்று கோவை மாநகராட்சி சார்பில் ஜூலை 8-ம் தேதி கூறப்பட்டது.
ஆனால், இன்று வரையிலும், ஒரு மையத்தில்கூட பணிகள் தொடங்கப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த மறுசுழற்சி மையங்கள் பயன்படுத்தப்படாமல் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
ஏற்கெனவே குடிநீர், சுகாதாரம், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து தராமல் கோவை மாநகராட்சி நிர்வாகம் மக்களை வஞ்சித்து வருகிறது. சுகாதாரச் சீர்கேட்டின் இருப்பிடமாகக் கோவை மாநகரம் திகழ்கிறது. தமிழக உள்ளாட்சித் துறை முற்றிலும் செயலிழந்து, ஒட்டுமொத்தமாகக் கோவை மாநகராட்சி நிர்வாகமே முடங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவுகளை மக்கச் செய்யும் பணிகளைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் தொடங்க வேண்டும். இல்லாவிடில் பொதுமக்களைத் திரட்டி திமுக சார்பில் அறவழியில் போராட்டம் நடத்தப்படும்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT