Last Updated : 25 Aug, 2020 03:08 PM

3  

Published : 25 Aug 2020 03:08 PM
Last Updated : 25 Aug 2020 03:08 PM

மத்திய அரசின் 'துலிப்' திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி: இளம் பட்டதாரிகள் - பட்டயதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

பிரதிநிதித்துவப் படம்

திருச்சி

மத்திய அரசின் 'துலிப்' திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சியில் சேர இளம் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு இளநிலைப் படிப்பை முடித்தவர்களுக்கு நாட்டில் உள்ள 4,400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், சீர்மிகு நகரத் திட்டப் பணிகளிலும் பயிற்சி வழங்கும் நோக்கில் மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும், மத்திய கல்வி அமைச்சகமும் இணைந்து 'துலிப்' (TULIP- The Urban Learning Internship Program) என்ற திட்டத்தை கடந்த ஜூன் 4-ம் தேதி டெல்லியில் தொடங்கின.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மற்றும் மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), ஹர்தீப்சிங் புரி ஆகியோர் இந்த பயிற்சித் திட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேருவதற்கு பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று (ஆக.25) அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் பி.இ., பி.டெக். (சிவில், இஇஇ, கணினி அறிவியல்), பி.ஆர்க்., பி.பி.ஏ., பி.எஸ்சி தோட்டக்கலை, பி.சி.ஏ., டி.இ.இ. (சுற்றுச்சூழல் பொறியியலில் பட்டயம்) முடித்து, 18 மாதங்களுக்குள் உள்ளவர்கள் www.internship.aicte-india.org என்ற இணையதள முகவரியில் செப்.11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு வரப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறுகையில், "ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 5 பேர் வீதம் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் அனைவருக்கும் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளில் 6 மாத காலம் பயிற்சியும், மாதத்துக்கு தலா ரூ.5,000 வீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x