Published : 25 Aug 2020 01:29 PM
Last Updated : 25 Aug 2020 01:29 PM

திமுக, காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்த ஜே.பி.நட்டா: மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி; கே.எஸ்.அழகிரி கண்டனம்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிற முயற்சியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஈடுபட்டுள்ளதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஆக.25) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றபோது, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழக வளர்ச்சிக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். எந்தெந்த வகையில் தடையாக இருக்கிறது என்பது குறித்து ஆதாரத்துடன் கூறாமல் குற்றச்சாட்டை பொத்தாம் பொதுவாகச் சுமத்தியிருக்கிறார்.

ஜே.பி.நட்டா: கோப்புப்படம்

கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதால்தான் பாஜகவுக்கு எதிராக மக்களிடையே கடும் எதிர்ப்பு உணர்ச்சி கொந்தளிப்பான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே பாஜக செல்வாக்கு இழந்த முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஜே.பி.நட்டா, ஆத்திரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியிருக்கிறார்.

தமிழகம் மிக நீண்ட பாரம்பரியம், கலாச்சாரத்தைப் பெற்றிருப்பதாக மேலும் கூறியிருக்கிறார். எவற்றையெல்லாம் பாஜக பறித்து வருகிறதோ, அவற்றின் பெருமைகளைக் குறித்துப் பேசுவதற்கு பாஜக தலைவருக்கு என்ன உரிமை இருக்கிறது? பாஜக ஆட்சி அமைந்தவுடன் தமிழக மக்களை பாதிக்கிற திட்டங்களைத் தொடர்ந்து திணித்து வருகிறது. தமிழகத்தின் தனித்தன்மையையும், அடையாளத்தையும் அழித்து வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் 2 ஆண்டுகளாக பாஜக அரசு முடக்கி வைத்திருக்கிறது. வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்று பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நீட் தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வுக்காக தமிழக அரசு நடத்த வேண்டிய பயிற்சி வகுப்புகள் நடப்பாண்டில் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வு நடத்துவது தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நொறுங்கிப் போகிற நிலையை ஏற்படுத்துவதாகும். இதற்கு நீட் தேர்வைத் திணிக்கிற பாஜக அரசும், அதைத் தடுக்கத் தவறிய அதிமுக அரசும்தான் காரணமாகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு இங்கேயிருக்கின்ற எதிர்க்கட்சிகள் தடையாக இருப்பதாக ஜே.பி.நட்டா கூறுகிறார். வளர்ச்சிக்கு யார் தடையாக இருக்கிறார்கள்? சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை - 2020 ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிடப்பட்ட நிலையில் அதை தமிழில் வெளியிட வேண்டும் என்பதற்குக் கூட, நீதிமன்றத்தில் போராடி உரிமையைப் பெற வேண்டியிருக்கிறது.

சூழலியல் அறிக்கை குறித்து கருத்துக் கேட்பதற்கு அதைத் தமிழில் வெளியிட வேண்டும் என்கிற குறைந்தபட்ச நியாயமான அணுகுமுறை கூட பாஜக அரசிடம் இல்லை. மக்களின் கருத்தைக் கேட்காமல் கரோனா காலத்தில் அவசர, அவசரமாக அதைச் சட்டமாக நிறைவேற்றுவதற்கு பாஜக அரசு முயற்சி செய்கிறது. இதன் மூலம் இயற்கை வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் பாஜகவின் நோக்கமாகும்.

அதேபோல, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக அவசரகதியில் தொழிலாளர்கள் சட்டத்திருத்தங்கள், பொதுத்துறை பங்குகள் விற்பனை, ரயில்வே துறையை தனியார்மயமாக்குவது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் இணைப்பு நடவடிக்கைகள், மின்சார உற்பத்தியில் தனியார் மயம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் அம்பானி, அதானிகளுக்குத் தாரை வார்ப்பு என தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது.

விவசாயிகளின் விலை பொருள்களுக்கு உரிய விலை வழங்கப்படவில்லை. ஒரு குவிண்டால் கரும்பு விலை ரூபாய் 275 ஆக இருந்ததை ரூபாய் 10 உயர்த்தி குறைந்தபட்ச ஆதரவு விலையாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. அதேபோல, கொப்பரை தேங்காய்க்கு ஒரு கிலோவுக்கு ரூபாய் 99.60 வழங்கியுள்ளது. இதை கிலோவுக்கு 120 ரூபாயாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கத் தயாரில்லை.

பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் முன்னணி பங்கு வகித்து வந்தது. ஆண்டுக்கு ரூபாய் 25 ஆயிரம் கோடிக்கு வர்த்தக ஏற்றுமதி நடைபெற்ற திருப்பூரில் தற்போது அதில் 50 சதவிகிதம் கூட ஏற்றுமதி செய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்திலோ அல்லது அனைத்து எதிர்க்கட்சிகளை காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்க வைத்து விவாதம் நடத்தாமல் ஒரு தலைப்பட்சமாக நடைமுறைக்குக் கொண்டு வருகிற முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது.

இதன் மூலம் இந்தி, சமஸ்கிருத திணிப்பு, கிராமப்புற மாணவர்கள் புறக்கணிப்பு, கல்வியைத் தனியார்மயமாக்கி வணிகமயமாக்கும் நோக்கத்தைக் கொண்டு புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

நீண்ட காலமாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைத்துக் கல்வியைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

மத்திய பாஜக அரசில் இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றிலும் புறக்கணித்து ஒற்றைக் கலாச்சாரத்தைப் புகுத்தி அதன் மூலம் 136 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஒற்றை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது.

புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் அறிக்கை போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. பொதுப் பட்டியலிலுள்ள கல்வி குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கப்படவில்லை.

கல்வியைப் பொறுத்தவரையில், பெரும்பங்கு நடைமுறைப்படுத்துவது மாநில அரசுகள்தான். அதை புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்திருக்கிறது. இதை எதிர்க்கிற துணிவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

எனவே, தமிழக மக்களால் வெறுக்கப்படுகிற கட்சியாக பாஜக இருக்கும் நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை, மத்திய, மாநில அரசுகள்தான் செய்ய முடியும். அதில் குறைகள் இருந்தால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும். ஆனால், தமிழக எதிர்க்கட்சிகள் மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகக் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அர்த்தமற்ற வாதமாகும்.

இத்தகைய வாதத்தை முன்வைத்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிற முயற்சியில் ஈடுபட்டுகிற பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x