Published : 25 Aug 2020 07:38 AM
Last Updated : 25 Aug 2020 07:38 AM
பொதுப் போக்குவரத்து இல்லாததால், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தினமும் ரூ.1,000 வரை செலவு செய்து வங்கிக்கு வந்து செல்கின்றனர். எனவே, ரேஷன் பணியாளர்கள்போல அவர்களுக்கும் போக்குவரத்துப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா ஊரடங்கால் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வங்கிகளில் வழங்கப்படும் நகைக் கடனை ஏழை, எளிய மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். வட்டி குறைவு என்பதால், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியை பலரும் நாடி வருகின்றனர்.
கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிவோர் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற மாநகரங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிவோர் தொலைதூரத்தில் இருந்துவருவதால், அதிகம் செலவு செய்ய வேண்டிஉள்ளது.
உதாரணத்துக்கு, சென்னையில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு தாம்பரம், செங்கல்பட்டு, பொத்தேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி போன்ற இடங்களில் இருந்து ஆட்டோ அல்லது காரில் வரும் ஊழியர்கள் தினமும் ரூ.800 முதல் ரூ.1,000 வரை செலவு செய்கின்றனர். இந்நிலையில், நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தினமும் போக்குவரத்துப் படியாக ரூ.200 தரப்படுவதுபோல தங்களுக்கும் தர வேண்டும் எனவேண்டுகோள் விடுத்து கூட்டுறவு சங்கப் பதிவாளருக்கு வங்கிப் பணியாளர்கள் கடிதம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. கரோனா காலத்தில் கூட்டுறவுவங்கிப் பணியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்குகின்றனர். நகைக்கடன் வழங்குதல் உள்ளிட்ட இதர பணிகளையும் தடையின்றி செய்கின்றனர்.
கரோனா காலத்தில், தேசிய வங்கிகளின் ஊழியர்கள் 6 நாட்கள் வேலைக்கு வந்தால் ஒருநாள் சம்பளம் கூடுதலாக தரப்படுகிறது. கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு அவ்வாறு தரப்படுவது இல்லை.
தவிர, பொதுப் போக்குவரத்து இல்லாததால், வங்கிக்கு வந்து செல்ல அதிகம் செலவு செய்கின்றனர். எனவே, நியாயவிலைக் கடை பணியாளர்கள்போல தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிப்பணியாளர்களுக்கும் போக்குவரத்துப்படி வழங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT