Published : 24 Aug 2020 06:43 PM
Last Updated : 24 Aug 2020 06:43 PM
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதயாத்திரையாக வருவதற்கும் அனுமதி இல்லை. இதை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்பன உள்ளிட்ட மேலும் பல கட்டுப்பாடுகள் நாகை மாவட்டக் காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும் ஆன்மிகச் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ம் தேதி ஆகும். இதையொட்டி அன்னையின் பிறந்த நாள் பத்து நாள் திருவிழாவாக ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் வேளாங்கண்ணி பேராலய விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகமும் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகமும் ஏற்கெனவே அறிவித்துள்ளன.
இந்தக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஏதுவாக நாகை மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கெல்லாம் 21 காவல் ஆய்வாளர்கள், 63 உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
வெளி மாநிலங்கள் அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணிக்குப் பாதயாத்திரையாக வர யாருக்கும் அனுமதி இல்லை எனவும் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரையும் தங்க அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை மீறும் விடுதி மற்றும் விடுதி உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியூரில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்களைத் தங்கள் இல்லங்களில் தங்க அனுமதிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பேராலயத்தில் கொடியேற்று நிகழ்வின்போது பேராலய பங்குத் தந்தைகள் உட்பட 30 பேர் மட்டுமே பங்குகொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அவர்கள் தனிமனித இடைவெளியுடன் கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையே பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT