Published : 24 Aug 2020 05:56 PM
Last Updated : 24 Aug 2020 05:56 PM
தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று (ஆக.23) மாலை குளிர்ந்த காற்று வீசியது. திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்தது. திருப்பத்தூரில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குட்டைப்போல் தேங்கியது. இதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் அடுத்த ஜெய்பீம் நகர், ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதிகளில் மழைநீர் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் இரவு தூக்கத்தைத் தொலைத்தனர்.
இந்நிலையில், தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான வீரனாமலை பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. இதனால், தமிழக பகுதியில் உள்ள மண்ணாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நாராயணபுரம், அலசந்தாபுரம், பூதனாறு, மண்ணாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கிருந்த வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் பகுதியில் உள்ள பாலாற்றில் கலந்து அம்பலூர், கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
பாலாற்றில் வெள்ளம் வருவதை காண அம்பலூர், கொடையாஞ்சி, நாராயணபுரம், அலசந்திராபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்பலூர் மற்றும் கொடையாஞ்சி பகுதிகளில் குவிந்தனர். பாலாற்றில் வெள்ளம் வந்ததை வரவேற்கும் விதமாக தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.
சிலர், பாலாற்றில் வெள்ளம் ஓடுவதைக் கண்டு நீரில் நின்றபடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நடப்பாண்டில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்து வருவதால் விவசாய நடவுப்பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றும், தற்போது கடலை சாகுபடி செய்திருப்பதால் இந்த மழை அதிக விளைச்சலைக் கொடுக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.24) காலை நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்:
ஆலங்காயம் 45.மி.மீ., ஆம்பூர் 25.8 மி.மீ., வடபுதுப்பட்டு 58.6 மி.மீ., நாட்றாம்பள்ளி 43.0 மி.மீ., திருப்பத்தூர் 63.0 மி.மீ., வாணியம்பாடி 40.0 மி.மீ., என சராசரியாக 45.2 மி.மீ., அளவுக்கு மழையளவு பதிவாகியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT