Published : 24 Aug 2020 06:37 PM
Last Updated : 24 Aug 2020 06:37 PM
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட ஆட்சி நிர்வாகத்துக்கான யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பேரறிஞருமான அண்ணாவின் கொள்ளுப் பேத்தி ப்ரித்திகா ராணி அகில இந்திய அளவில் 171-வது இடத்தைப் பெற்றுள்ளார். 2018-ல் கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே ஐஏஎஸ் கனவை நனவாக்க, தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்ட ப்ரித்திகா ராணி, தன்னுடைய 23-ம் வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.
பள்ளிக் காலங்களில் டென்னிஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர் ப்ரித்திகா. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர். படிப்பிலும் திறமையான மாணவியாக இருந்தார். பெண்ணுரிமை, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பணியாற்ற ஆசைப்பட்டு குடிமைப் பணியை இலக்காகக் கொண்டவர், அதில் சாதித்தும் காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரும் குடும்பத்தில் இருந்து வந்தபோதும் தன்னுடைய வெற்றியையே தனக்கான அடையாளமாக நினைக்கும் ப்ரித்திகா, ஊடக வெளிச்சம் தன் மீது விழுவதை விரும்பவில்லை. அதனாலேயே அவர் பெரிதாக யாருக்கும் பேட்டியளிக்கவில்லை. இந்நிலையில் ப்ரித்திகா ராணி 'இந்து தமிழ்' இணையத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவுக்கு எந்த வகையில் நீங்கள் பேத்தி?
பேரறிஞர் அண்ணாவுக்கு நான் கொள்ளுப் பேத்தி. அவரின் மகன் பரிமளம் எனக்குத் தாய்வழித் தாத்தா. பரிமளத்தின் மகள் இளவரசி என்னுடைய அம்மா.
எங்கு, என்ன படிப்பை முடித்தீர்கள்?
என்னுடைய பள்ளிக் கல்வி முழுவதையும் சென்னையில்தான் படித்தேன். எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் 2018-ம் ஆண்டில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலை முடித்தேன். அடுத்த தினமே ஐஏஎஸ் பயிற்சியைத் தொடங்கினேன்.
வழிகாட்டல் வேண்டும் என்று தோன்றியதால் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இணைந்தேன். அங்குள்ள ஆசிரியர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தனர். எப்போதும் அணுக முடிந்தவர்களாக இருந்தவர்கள், தொடர்ந்து ஊக்கப்படுத்தினர்.
ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது எப்படி?
சிறு வயதில் இருந்தே அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதிகாரம் மிகுந்த பதவியில் இருந்தால் உதவி செய்வது எளிதில் சாத்தியம் என்பதால் ஆட்சிப் பணியைத் தேர்ந்தெடுத்தேன்.
சிவில் சர்வீஸின் மூன்று தேர்வுகளில் எதில் தோல்வி என்றாலும் முதலில் இருந்து முயல வேண்டும். முதல் முறையிலேயே வெற்றி பெற்ற உங்களின் அனுபவத்தைச் சொல்லுங்கள்...
அதீதமாகப் படிப்பது போன்று எதையும் செய்யவில்லை. ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தில் கொடுத்தவற்றை மட்டுமே படித்தேன். அவ்வப்போது தோன்றும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்தேன். எப்போது வேண்டுமானாலும் என் ஆசிரியர்களை அழைக்கலாம் என்ற சுதந்திரம், படிக்க இன்னும் ஊக்குவிப்பாக இருந்தது.
அதேபோல எனக்கு ஏற்கெனவே படிக்கும் பழக்கம் உள்ளதால் நீண்ட நேரம் படிப்பது கடினமாக இல்லை. சில சமயங்களில் நேரம் போவதே தெரியாமல், தொடர்ந்து மணிக்கணக்காகப் படித்துக்கொண்டே இருப்பேன்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் தேர்வாகும் குடிமைப் பணி அதிகாரிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்துகொண்டு வருகிறதே?
தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி, வெளியே வரும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, அரசு வேலைகளை நாடும் மக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாக இருக்கிறது.
அதே நேரத்தில் படிப்பவர்களின் ட்ரெண்ட் தற்போது மாறி வருகிறது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விரும்பிப் படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத்தான் நான் நினைக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது என்னுடைய பேட்ச்சிலேயே 20 முதல் 30 பேர் ஆட்சிப் பணிக்குத் தயாராக முடிவெடுத்து, அதற்கான படிப்பைத் தேர்ந்தெடுத்தனர்.
சிவில் சர்வீஸ் தேர்வின் மூன்று படிநிலைகளில் எது சவாலானதாகவும் கடினமாகவும் இருந்தது?
தனிப்பட்ட வகையில் எனக்கு முதல்நிலைத் தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. முதல் முறை எழுதியதால் என்றில்லை. அந்த ஒரு குறிப்பிட்ட தினத்தில் சிறிய ஒரு தவறை நாம் செய்திருந்தாலும் அடுத்தகட்டத்துக்குத் தேர்வாகி இருப்பது கடினமாக மாறியிருக்கும். இதற்குக் காரணம் நம்முடைய அறிவுத்திறன் அல்ல. நேர நெருக்கடி மற்றும் அழுத்தத்தால் எடுக்கக் கூடிய திடீர் முடிவால் நாம் பின்தங்க வாய்ப்புண்டு.
முதன்மைத் தேர்வைத் தன்னம்பிக்கையுடன், தொடர் உழைப்பைக் கொண்டு எதிர்கொண்டேன். இதனால் அடுத்தடுத்த கட்டங்களை எளிதாகவே எதிர்கொள்ள முடிந்தது. இலக்கில் உறுதியாக அதேசமயம் தொடர் முயற்சியுடன் ஈடுபட்டதால், வெற்றி வசமானது.
யாருக்காகப் பணியாற்ற விருப்பம்?
என் முதல் விருப்பம் வெளியுறவுத் துறைதான். இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுக்கிடையேயான உறவுகளில் ஆர்வமாக இருக்கிறேன். இதற்காகவே ஐ.நா. சபை மற்றும் யுனெஸ்கோ போன்ற நிறுவனங்களில் பணியாற்ற விருப்பமாக உள்ளது.
ஐஏஎஸ் படிக்க விரும்பும் தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஆட்சிப் பணிக்கான பாடத்திட்டம் கடினமாக இருக்கும், அடிக்கடி பாடங்கள் மாறும் என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். குடிமைப் பணிக்கான தேர்வு முறையில் அல்லது பாடத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்தால், அது அனைத்து மாணவர்களையுமே பாதிக்கும். தேர்வு முறை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதற்கு எல்லா விதத்திலும் தயாராக இருப்பதே எப்போதும் வெற்றியைத் தரும்.
நாட்டுக்காக உண்மையாகவே நீங்கள் சேவை செய்ய விரும்பினால், ஆட்சிப் பணியை விடச் சிறந்த வேலையோ, சேவையோ இல்லை. எந்தவித சந்தேகமும் இல்லாமல் உறுதியுடன் தொடங்குங்கள். உங்கள் கனவை நனவாக்கலாம்.
இவ்வாறு ப்ரித்திகா ராணி தெரிவித்தார்.
- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT