Published : 24 Aug 2020 03:20 PM
Last Updated : 24 Aug 2020 03:20 PM
கரோனா தடுப்புப் பணிகளைத் தேர்தலுக்கான பிரச்சாரமாக அதிமுக அரசு மாற்றி வருவதாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினரான கனிமொழி இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக ஒரு நிபுணர் குழுவையே அமைத்து ஆய்வு செய்தது.
இந்தக் கொள்கையில் நமக்கு உள்ள கருத்து வேறுபாடுகளை ஒரு புத்தக வடிவிலேயே தயார் செய்து எம்பிக்கள் அனைவரும் சேர்ந்த மத்திய அமைச்சரிடம் கொடுத்துள்ளோம்.
ஆனால், அதில் இருக்கும் எந்த கருத்துக்களையும் அவர்கள் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. திமுக மட்டும் அல்ல நாடு முழுவதுமே பல பேர் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறியும் அதில் எந்த மாற்றத்தையும் மத்திய அரசு செய்யவில்லை.
இந்த கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரான ஒரு கல்விக் கொள்கையாக இருக்கிறது. மேலும், மொழி திணிப்பு, மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு, உரிமைகளில் தலையிடுகிற ஒரு கல்விக் கொள்கையாகவே இருக்கிறது.
இதனால் தான் அதனை நாங்கள் எதிர்க்கிறோம். தற்போது இந்த கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து கேட்டிருக்கிறார்கள். சொல்லக்கூடிய கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டால் வரவேற்கலாம்.
நீட் தேர்வே வேண்டாம் என்பது தான் திமுகவின் நிலை. சமீபத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது. அதனால் கரோனா காலத்தில் இந்த ஓராண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதன் பிறகு முற்றிலுமாக நீக்குவது குறித்து யோசிக்கலாம்.
கரோனா காலத்தில் தமிழக அரசு ஏற்படுத்தும் குழப்பங்களைப் பட்டியலிடவே முடியாது. தேர்தலுக்கான பிரசாரமாக இதை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.
அனைத்து மாநிலங்களிலும் எதிர்கட்சிகள் உள்ளிட்ட மாற்று கட்சியினரையும் இணைத்துக் கொண்டு தான் கரோனா பணியை அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் யார் சொல்லக்கூடிய கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதில்லை.
கரோனா தடுப்பு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சில கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறி வருகிறார். ஆனால், இதனை அரசு ஏற்றுக் கொள்வதில்லை.
தமிழகத்தில் கரோனா தடுப்பு என்பது ஏதோ அதிமுக மட்டுமே செய்யக் கூடிய பணியாக நினைத்து கையாண்டு வருகின்றனர். இது மிகவும் தவறானது. தமிழகத்தில் அரசு விழாக்களுக்கு எதிர்கட்சி மற்றும் மாற்றுக் கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுப்பதில்லை. கரோனா காலத்தில் மட்டுமல்ல. அதற்கு முன்பிருந்தே இதே நிலைதான் என்றார் கனிமொழி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT