Published : 24 Aug 2020 02:41 PM
Last Updated : 24 Aug 2020 02:41 PM
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் இன்று முதல் செயல்படத் தொடங்கியது. வியபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க இரும்புக் கம்பிகளைக் கொண்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிகவும் முக்கியமானது. வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் இங்கு ரோஜா முதல் உள்ளூர் மதுரை மல்லி வரை பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
கரோனா தொற்று நோய்ப் பரவலால் கடந்த 4 மாதத்திற்கு மேலாக இந்த பூ மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. பூ வியாபாரிகள், அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆங்காங்கே சாலைகளில், குடியிருப்புப் பகுதிகளில் அமர்ந்து வியாபாரம் செய்துவந்தனர்.
கரோனா ஊரடங்கில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததாலும், பூ வாங்கி சாமி பூஜை செய்வதற்கும், தலையில் சூடுவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால், ஒட்டுமொத்த வியாபாரமும் முடங்கி இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்த சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது மதுரையில் கரோனா குறைந்த நிலையில் ஒவ்வொரு தொழில்களும் பழைய மாதிரி இயங்க ஆரம்பித்துள்ளது. மூடப்பட்டிருந்த மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் செயல்படுவதற்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து, இன்று முதல் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் செயல்படத் தொடங்கியது. அங்கு வரும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தமிழகத்திலே முதல் முறையாக சமூக இடைவெளியைக் கடைபிடிக்க ரூ.4 லட்சம் செலவில் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பிரத்தியோகமாக தடுப்பு வேலி உருவாக்கப்பட்டுள்ளது. 4 அடி நீளத்திற்கும் 4 அடி அகலத்திற்கும் 4 அடி உயரத்திற்கும் இந்தத் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘வட்டம் போட்டு மக்களை நிற்க சொன்னாலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க மாட்டார்கள்.
அதனால், நிரந்தரமாகவே சமூக இடைவெளியைக் கடைபிடிக்க இரும்புக் கம்பியைக் கொண்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மார்க்கட்டில மொத்தம் 102 வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர்.
முன்பு ஒரு நாளைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்வார்கள். ஆனால், இன்று செயல்பட்ட முதல் நாளில் விசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என 2 ஆயிரம் பேர் மட்டுமே வந்தனர்.
பொதுமக்கள் அதிகம் வரவில்லை. வியாபாரம் ஒரளவு பரவாயில்லை. மார்க்கெட் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்னும் 15 நாட்களில் பூ வியாபாரம் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கிறோம், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment